
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், ‘நான் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அதே மருத்துவமனையில் விழுப்புரம் அருகிலுள்ள சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த விஜய்(24), என்பவர் லேப் டெக்னீஷனாக வேலை பார்த்து வந்தார். அதன் மூலம் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. அந்த அறிமுக பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம்.
இந்த நிலையில், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய விஜய் பலமுறை என்னிடம் எல்லை மீறி நடந்து கொண்டார். சில மாதங்களுக்கு பிறகு விஜய் இதே போன்று பல்வேறு பெண்களுடன் தவறான தொடர்புகள் வைத்திருந்தது எனக்கு தெரியவந்தது. அதன் பிறகு அவருடன் எனக்குள்ள பழக்கத்தை தவிர்த்து அவரை விட்டு முற்றிலும் ஒதுங்கிக் கொண்டேன்.
இந்த நிலையில், எனக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதை அறிந்த விஜய் என்னிடம் இரண்டு லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். ‘அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால், அவருடன் பழகியபோது, எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு திருமணத்தை தடுத்து நிறுத்துவேன். இதனால் உன் வாழ்க்கை நடுத்தெருவில் நிற்கும்’ என்று கூறி தொடர்ந்து மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.