சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு காலை 6.30 மணிக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய நபர் சென்னையில் இருந்து துபாய் செல்லும் இ-65 விமானத்தில் குண்டு வைத்துள்ளதாகவும், அது சில நிமிடத்தில் வெடிக்க போகிறது என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் எஸ் 2 காவல் நிலைய போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்ணை ட்ராக் செய்து ஒரு மணி நேரத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ரஞ்சித் குமாரின் அக்கா வேலைக்காக துபாய் செல்ல அதே விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்தார். அப்போது போதையில் இருந்த ரஞ்சித் குமார் தன் அக்காவிற்கு போன் செய்து பார்த்திருக்கிறார். ஆனால் அவரது அக்கா போனை எடுக்கவில்லை என்பதால் போதை தலைக்கு ஏறிய ரஞ்சித் குமார், விமான நிலைய கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து குண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது. ஆனாலும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பாம் ஸ்குவாட் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் விமான நிலையத்தையும் சம்பந்தப்பட்ட விமானத்தையும் சோதனை செய்தனர். பின்னர் காலை 9:45க்கு விமானம் கிளம்பி சென்றது. கைது செய்யப்பட்ட ரஞ்சித் குமாரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.