மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம் பா.ஜ.க.வில் இணைந்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய சுற்றுச்சுழல் துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மற்றும் கனரக தொழில்துறை மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளரான அருணாச்சலம். இந்த நிகழ்வின் போது, பா.ஜ.க.வின் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருணாச்சலம், "புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தேன். புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்க கேட்டபோது கமல் உள்ளிட்ட நிர்வாகிகள் அதற்கு எதிராக முடிவெடுத்தனர். விவசாயிகள் நலன் கருதி பாஜகவில் இணைந்தேன். தொலைநோக்கு சிந்தனையுடன் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது" என்றார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பா.ஜ.க.வில் இணைவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.