
சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் உள்ள 60 அடி பாலத்தின் அருகே துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அங்குச் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் பெண்ணின் உடல் ஒன்று கிடந்துள்ளது. உடனடியாக தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு போலீசார் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு, உடல் அருகே, கிடந்த பெண்ணின் அடையாள அட்டையை கைப்பற்றிய போலீசார் அதனடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அந்த பெண் திருச்சி துறையூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகள் லோகநாயகி(35) என்பது தெரியவந்தது. பெற்றோர் இருவரும் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் லோகநாயகி சித்தியின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். ஆசிரியையான லோகநாயகி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மகளிர் விடுதியில் தங்கி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில்தான் லோகநாயகி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கையின்படி, லோகநாயகியை விஷ ஊசி செலுத்தி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் லோகநாயகியும் பி.இ படித்துவரும் அப்துல் ஹபீஸும் காதலித்து வந்ததை கண்டுபிடித்தனர். அதன்பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் லோகநாயகிக்கு விஷ ஊசி செலுத்தி, நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், “லோகநாயகி சித்தி வீட்டில் வளர்ந்து வந்த போது, அவருக்கும் அவரது சித்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக லோகநாயகி, வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்து தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது அவரது எதிர்வீட்டில் நாங்கள் வசித்து வந்தோம். இந்த நிலையில் எனக்கும் லோகநாயகிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.
இந்த சூழலில் லோகநாயகிக்கு சேலத்தில் வேலை கிடைத்ததால் அவர் அங்கே சென்றுவிட்டார். அதன்பிறகு நானும் அடிக்கடி சேலம் செல்வேன். இருவரும் விடுதியில் தனி அறை எடுத்து தனிமை இருந்திருக்கிறோம். இந்த நிலையில் நிஷா, நூர்ஜகான் என்ற இரு பெண்களையும் நான் காதலித்தேன். எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருச்சியைச் சேர்ந்த 21 வயதான மருத்துவ மாணவி நிஷாவுடன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு நிஷாவை காதலிக்க ஆரம்பித்தேன். இந்த விவகாரம் எனது வீட்டிற்குத் தெரிந்ததால், எனக்கு திருமண செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். இதனிடையே சென்னையைச் சேர்ந்த நூர்ஜகான்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலிப்பதாக வீட்டில் கூறினேன். அதனைத் தொடர்ந்து நூர்ஜகானுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதுகுறித்து லோகநாயகிக்கு தெரிய வந்ததால், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார். ஆனால், நான் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தேன். திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதோடு, அவளது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இந்த நிலையில் செய்வதறியாது தவித்த நான் இது குறித்து நூர்ஜகானிடம் கூறினேன். ‘என்னை லோகநாயகி ஒருதலை பட்சமாக காதலித்து வருவதாகவும், நமது திருமணத்திற்கு லோகநாயகி இடையூறாக இருப்பார் என்றும், லோகநாயகியால் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நூர்ஜாகனிடம் கூறினேன். அதனைத் தொடர்ந்து நானும் நூர்ஜகானும் லோகநாயகியைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினோம். அதற்கு உதவி செய்யுமாறு மருத்துவ மாணவியான நிஷாவிடம் இருவரும் உதவி கேட்டோம். அதற்கு நிஷா மயக்க மருந்தை அதிகளவில் கொடுத்தால் லோகநாயகி உயிரிழந்துவிடுவார் யோசனை கூறினார்.
அதன் பிறகு நிஷா மற்றும் நூர்ஜகான் இருவரையும் அழைத்துக் கொண்டு சேலத்திற்கு சென்றேன். அங்கு கடந்த 1 ஆம் தேதி கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து லோகநாயகியை தொடர்பு கொண்டு ஏற்காடு வரை செல்லலாம் என்று அழைத்தேன். ஆனால் ஏற்காடு வர லோகநாயகி மறுத்துவிட்டார். அதன்பிறகு காரில் எனக்கு நிச்சயம் செய்யப்பட்ட நூர்ஜகானும் வந்திருக்கிறார். அவரிடம் நடந்த உண்மையை கூறி, இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தேன். அதன்பிறகு லோகநாயகி என்னுடன் வரச் சம்மதம் தெரிவித்தார்.
அதன் பிறகு லோகநாயகி, நிஷா, நூர்ஜகான் ஆகிய மூன்று பேருடன் நானும் காரில் ஏற்காடு சென்றுகொண்டிருந்தோன். அப்போது இடையில் நானும், நூர்ஜகானும் லோகநாயகியை மடக்கிப் பிடித்து கொண்டோம். நிஷா அவருக்கு இரண்டு முறை விஷ ஊசியைச் செலுத்தினார். பின்னர் லோகநாயகி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு மலைப்பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகே உடலை வீசிவிட்டுச் சென்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்துல் ஹபீஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும் இரு காதலிகளையும் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர். இரு காதலிகளின் துணையுடன் முதல் காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.