கடன் வாங்கிய லாரி உரிமையாளரிடம் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று லாரியை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனம், 20.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் - மோகனூர் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் (43). இவர், கடந்த 2018ம் ஆண்டு, 28.25 லட்சம் ரூபாயை தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாகப் பெற்று, லாரி வாங்கினார். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் லாரியை தனியார் நிதி நிறுவனத்தினர் திடீரென்று பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்கவேல் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், அந்த நிதி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
தனியார் நிதி நிறுவனத்தினர் தனக்கு எந்த வித முன் அறிவிக்கையும் செய்யாமல் லாரியை பறிமுதல் செய்து விட்டனர். 30 லட்சம் ரூபாய் லாரியை 7.60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளனர். ஏலத்தில் விற்பனை செய்வது குறித்தும் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. விற்பனை செய்யப்பட்ட பிறகும்கூட எனக்கு கணக்கு விவரங்களை தெரியப்படுத்தவில்லை.
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான எனக்கு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் 23 லட்சம் ரூபாய் இழப்பீடும், நிதி நிறுவனத்தின் செயல்களால் ஏற்பட்ட சிரமங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும் என தனது மனுவில் தங்கவேல் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு குறித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கும், நாமக்கல்லில் உள்ள கிளை அலுவலகத்திற்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து பதில் எதுவும் தரவில்லை. இந்நிலையில், வழக்கு தாக்கல் செய்தவரின் சாட்சியம் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து, வாதங்களை நீதிமன்றம் கேட்டது. கடந்த வாரம் விசாரணை முடிந்தது.
நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், நேற்று முன்தினம் (ஏப். 24) தீர்ப்பு அளித்தார். தீர்ப்பு விவரம்: சட்ட விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை பறிமுதல் செய்யாமல், சட்ட விரோதமாக வாகனத்தை நிதி நிறுவனம் பறிமுதல் செய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரியை 2 ஆண்டுகள் கழித்து 7.60 லட்சம் ரூபாய்க்கு நிதி நிறுவனம் விற்பனை செய்துள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலைக்கு லாரியை விற்றதைப் பார்க்கையில், நிதி நிறுவனம் தீய லாபம் அடைவதற்காகச் செயல்பட்டுள்ளது தெரிகிறது.
வாகனம் விற்பனை செய்யப்பட்ட பிறகு, பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. காப்பீடும் புதுப்பிக்கப்படாமல் வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தனியார் நிதி நிறுவனம் 20.80 லட்சம் ரூபாயை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணம் வழங்கப்படும் வரை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.