அரியலூர் மாவட்டம் கீழ் காவட்டங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்க சண்முகசுந்தரம். இவர் அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தமிழ் தமிழ் மாநில விவாசய பிரிவு தலைவராக உள்ளார். விவசாயிகளுக்காகவும் கிராம மக்களுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்திய இவர், அப்பகுதியில் உள்ள ஏரியை தனது சொந்த பணத்தில் சுமார் 6 லட்சம் செலவில் குடிமராமத்து பணியையும் செய்துள்ளார். தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தனது ஊரான கீழ்க்கோட்டச்குறிச்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
மக்களிடம் வாக்கு கேட்டு செல்லும்போது கையில் சவுக்கு எடுத்து சென்று வாக்கு கேட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கிராமப்புற மக்களின் பொருளாதாரம் மிகவும் சீரழிந்து வருகிறது. உதாரணமாக மக்களின் செலவுகள் அதிகரித்துள்ளது. அவர்களின் வருவாய் குறைந்து விட்டது. ஒரு கேஸ் சிலிண்டர் 800 ரூபாய், 900 ரூபாய் என வாங்கி மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள். அந்த கேஸ் வெறும் நூறு ரூபாய்க்கு தயாரித்துக் கொடுக்க முடியும். காரணம் எங்கள் பகுதியில் சுமார் 5000 மாடுகள் வளர்க்கிறார்கள். இந்த மாடுகள் மூலம் உருவாகும் சாணத்தில் 3 தட்டு சாணம் மூலம் 13 முதல் 15 கிலோ வரை எரிவாயு தயாரித்து கொடுக்க முடியும். இதற்கு ஆகும் செலவு வெறும் 100 ரூபாய் மட்டுமே. அதேபோல் சூரிய ஒளி மூலம் குறைந்த செலவில் மின்சாரத்தை தயாரித்து மக்களுக்கும் அரசுக்கும் வழங்க முடியும். இப்படி ஏகப்பட்ட திட்டங்கள் என்னிடம் உள்ளன.
மக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கக் கோரி அரசின் பல்வேறு துறைகள் நடத்தும் முகாம்களுக்கு சென்று மனு கொடுக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மக்களின் மனுக்கள் மீது 99% சதவீதம் பிரச்சினைகளை குறைகளை அதிகாரிகள் தீர்ப்பதில்லை. காரணம் அதிகாரிகளின் அலட்சியம். எனவே அப்படிப்பட்ட மக்கள் தங்கள் பிரச்சினைகளை என்னிடம் மனுவாக கொடுத்தால் அதை அதிகாரிகள் மூலம் விரைந்து தீர்வு காண்பேன். அப்படி தீர்க்க முடியாவிட்டால் அதற்காக அரசிடம் அதிகாரிகளிடம் போராடி வாதாடி தீர்த்து வைப்பேன்.
ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் பல்வேறு வேட்பாளர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்தால் அவர்கள் செலவு செய்த தொகையை விட அதிக அளவில் சம்பாதிக்கவே செய்வார்கள். அப்படிப்பட்டவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. எனவே தான் உங்களுக்காகவே வாழும் என்னை தேர்ந்தெடுங்கள். நான் தவறு செய்தால் லஞ்சம் வாங்கினால் இதோ இந்த சவுக்கால் என்னை நடுத்தெருவில் நிற்க வைத்து அடியுங்கள் என்று மக்களிடம் சவுக்கை கொடுத்துகாட்டி வாக்கு கேட்கிறேன் என்கிறார்.
அதேபோல் மக்கள் திட்டங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கக்கூடாது என்று விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகிறார். இப்படி ஒரு வித்தியாசமான போராட்டங்களும் இவரது தேர்தல் பிரச்சாரமும், பொது மக்கள் மட்டுமல்ல அரசு அதிகாரிகள் முதல் டெல்லி வரை வியப்போடும் ஆச்சரியமாகவும பார்க்கப்படுகிறது உற்று நோக்கப்படுகிறது காரணம் உளவுத்துறை மூலம் இவரைப் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் அதிகார மட்டத்திற்கு தெரியப்படுத்தப்படுகிறது இதனால் இவருக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருகிறார்கள் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம கவலைப்படாமல் பெரிதுபடுத்தாமல் மக்கள் பணியில் தீவிரமாக உள்ளார் தங்கசண்முகசுந்தரம். மேலும் அவர் கூறும்போது, மக்கள் என்னை தலைவராக தேர்ந்தெடுத்தாலும், தேந்தெடுக்காவிட்டாலும் என் பணி மக்கள் பணி. அது எப்போதும் தொடரும் என்கிறார் தங்கசண்முகசுந்தரம்.