Skip to main content

குடி தண்ணீரின்றிப் சாகப் போகும் கோவை

Published on 22/06/2018 | Edited on 22/06/2018

 

சுயஸ் ..
 

இந்த பெயர் தான் கோவை மக்களை திணறடிப்பதோடு கோவை மக்களிடம் தற்போது அதிகமாக பதறிப்  போய்  பேசப்படும் பெயராகவும்  மாறி இருக்கிறது. 
 

ஏனெனில் இனி தங்களுக்கு குடிநீர் கிடைக்குமா?  என்பதை நிர்ணயிக்கும் உரிமையை அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளதே  காரணம். 

அதாவது கோவை மாநகராட்சியில் 24*7 என்ற முறையில் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் உரிமையை பிரெஞ்சு நாட்டினை சேர்ந்த சுயஸ் பிராஜக்ட்ஸ் பிரைவட் லிமிடெட் என்ற நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. 

 

 

 

இத்திட்டத்தினை 556.57 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் குழாய்கள், நீர்தேக்க தொட்டிகள், நீர் உந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க முடிவு செய்துள்ளது. 
 

இத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும், தானியங்கி குடிநீர் அளவுமானிகள் பொருத்தப்பட்டு எந்த நேரமும் பணம் செலுத்தும் இயந்திரம் வழங்கப்படுமெனவும் மாநகராட்சி 2018-19 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 

இதனிடையே சுயஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... கோவை மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கும் உரிமையினை கடந்த பிப்ரவரி மாதம் 400 மில்லியன் யூரோ தொகைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

 

water


 

இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 3 ஆயிரத்து 100 கோடியாக உள்ளது. 1.6 மில்லியன் குடியிருப்புகளுக்கு குடிநீர் 24 மணி நேரமும் வழங்க உள்ளதாகவும், ஒராண்டு ஆய்வு காலம், செயல்படுத்த 4 ஆண்டுகள் உட்பட 26 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. டெல்லி மாளவியா நகரில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் இரண்டாவது நகரமாக கோவையில் செயல்படுத்தப்பட உள்ளது. 
 

இதேபோல பெங்களூரு, கோல்கத்தா நகரங்களிலும் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதல்கட்டமாக ஒன்றரை இலட்சம் வீடுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்தவும், மாநகராசியில் உள்ள குடிநீர் இணைப்புகள் குறித்த கணக்கெடுக்கும் பணிகளை அந்நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.
 

24 மணி நேரமும் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும், பணம் இருப்பவர்களுக்கே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை உருவாகும் என கோவை மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் .
 

இலவசமாக தண்ணீர் கொடுக்கும் பொதுக்குழாய்கள் அகற்றப்படுமா? பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா? சுயஸ் நிறுவனம் எப்படி குடிநீர் கட்டணத்தை நிர்ணயிக்கும்? அத்தியாவசிய தேவையான குடிநீரை வாடிக்கையாளர் என்ற முறையில் எப்படி வாங்க முடியும்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார்கள்  சமூக ஆர்வலர்கள் .
 

''மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தாமல் சுயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி குத்தகைக்கு வழங்கி இருப்பதாகவும், அந்நிறுவனத்தின் குடிநீர் விநியோகம் தொடர்பாக வெளிப்படைதன்மை இல்லை எனவும் கூறிய அவர், இத்திட்டம் குறித்து மாநகராட்சி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் '' சூழலியல் செயற்பாட்டாளாரான சிவா .

 

 

 

மேலும் அவரே ...கோவையின் குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி, பில்லூர் அணைகள் முதல் ஒவ்வொரு வீட்டின் தண்ணீர் தொட்டிகள் வரை அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் எனவும், உள்ளாட்சி அமைப்புகளும், மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளும் இல்லாத நேரத்தில் குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும் 
 

சுயஸ் நிறுவனம் மீது வெளிநாடுகளில் நிறைய புகார்கள் இருக்கின்றன . அதாவது  மழைத் தண்ணீரை கூட மக்களை சேகரிக்க விடுவதில்லை என்ற புகார் இருப்பதாகவும், அந்த நிலை கோவைக்கும் வர உறுதியாய் வாய்ப்புள்ளதாகவும் 
 

ஒவ்வொரு வீட்டிலும் மாதந்தோறும் குடிநீருக்கு பெரும் தொகையை ஒதுக்க வேண்டி வரும் என தெரிவித்தார். 

கோவை மாநகராட்சியில் சீராக தண்ணீர் விநியோகித்தாலே போதும் எனவும், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக குடிநீர் பகிர்ந்தளிக்க வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்தார். 
 


இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனிடம் விளக்கம் கேட்ட போது....சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களால் அதிக அளவில் குடிநீர் வீணாகிறது .  இதனை மாற்ற பெரும்தொகை தேவைப்படும் என்பதால் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கி உள்ளோம் . 
 

மேலும் மாநகராட்சி நிர்வாகமும், அரசுமே குடிநீரின் விலையினை நிர்ணயிக்கும். தேவைக்கேற்ப பொதுக்குழாய்கள் இருக்கும் . குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

ஆளும் அரசு என்ன  வேண்டுமானாலும் சமாளிப்பு சொல்லட்டும் .  ஆனால் எந்த சமாளிப்பையும் சமாளிக்க  முடியாத எங்கள்  மீது  உங்கள்  பண ஆசைக்காக  தண்ணீரின்றி தவிக்க வைத்து விடாதீர்கள் எனத்தான் ஆளும் அரசிடம் இரந்து கேட்கிறார்கள் .
 

இரந்து கேட்பவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வருமா... துப்பாக்கிகளின் குண்டுகளில் மக்களை கொலை செய்யும் அதிமுக அரசு ? என்கிற  குரல்கள்தான் ஓங்கி ஒலிக்கின்றன மேற்கு மலைத் தொடர்ச்சி மலையின் மீது.


 

சார்ந்த செய்திகள்