Skip to main content

சம்பளம் வழங்காததால் மன உளைச்சலில் சர்க்கரை ஆலை ஊழியர் மரணம்!  பெண்ணாடத்தில் நிவாரணம் கோரி சாலை மறியல்! 

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
pe

 

கடலூர் மாவட்டம்,  பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவர் இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை குடியிருப்பில் தங்கி, சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார். 

 

சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 3 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளமும் மற்றும் போனஸ் தொகையும் வழங்காததால் மன உளைச்சலோடு காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.

 

p

 

இந்நிலையில், நேற்று காலை 6:00 மணியளவில் பணிக்கு வந்த அவர் 7:30 மணியளவில் அங்குள்ள கேன்டீனில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணிக்கு சென்றார். அப்போது ஆலையில் படிக்கட்டில் ஏறும்போது அருள்தாஸ் மயங்கி விழுந்தார். உடன் சக ஊழியர்கள் அவரை மீட்டு பெண்ணாடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்து விட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்தனர். பின்னர் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அருள்தாஸ் உடல் கொண்டு செல்லப்பட்டது. 

 

இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   இதற்கிடையே, ஆலையின் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் அருள்தாஸ் இறப்பிற்கு உரிய நிவாரணம் மற்றும் ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணாடம் ரயில்வே மேம்பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர். 

 

தகவலறிந்து வந்து  போலீசார் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று அனைவரும்  கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

சார்ந்த செய்திகள்