தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தல் வேட்புமனு தாக்கல் துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சில ஊராட்சிகளில் தலைவர் உட்பட சில பதவிகளை ஏழம் விட்டும் வருகிறார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்படி இருந்தும் கூட சில இடங்களில் மறைமுகமாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் ஏலம் போய் கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் தேனி அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யும் சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி அருகே இருக்கும் ஸ்ரீரங்கபுரம் கிராமத்திற்கு ஒரு ஊராட்சிமன்றத்தலைவர், ஒன்பது ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. இதில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஊர் நடுவே இருக்கும் சமுதாயக் கூடத்தில் ஒன்றுகூடி, ஊராட்சி மன்றத்தலைவர், வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்து பேசினர். முடிவில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பெயர்களை துண்டுச் சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்தெடுத்தனர். அதே போல, ஒன்பது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பெயர்களையும் துண்டுச் சீட்டில் எழுதி, வார்டு நம்பர் எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேட்டபோது, "குலுக்கல் முறை ஏலம் விடுதல் அனைத்தும் சட்டப்படி குற்றம். தேனி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவர் ஆகியோரை ஸ்ரீ ரங்கபுரத்திற்கு அனுப்பியிருக்கிறேன். விசாரணை செய்யப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.