கஜா புயலின் கோரதாண்டம் முடிந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால் அதிலிருந்து இன்றும் யாரும் மீளவில்லை. மத்திய, மாநில அரசுகள் செய்வதாக சொன்னதையும் செய்யவில்லை.
இந்த நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் திக்.. திக்.. நாட்களாகவே பார்க்கிறார்கள். கஜா வுக்கு பிறகு புயல் என்ற வார்த்தையை கேட்டாலே அதிர்ச்சியாகிறார்கள் மக்கள். 1952, காலக்கட்டத்தில் இரண்டு புயல்கள் வந்து இதே போல மரங்களையும், மக்களையும், வீடுகள், ரயில் தண்டவாளங்கள் வரை அத்தனையும் அழித்துவிட்டுப் போனதை.. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புள்ளாண்விடுதி நடேசக் கோனார் என்ற நாட்டுப்புறப் பாடகர் அழகாக பதிவு செய்திருந்ததை தற்போது நினைத்துப் பார்க்கிறார்கள். அப்போதைய அதே பாதிப்புகள் தான் தற்போதும் நடந்துள்ளது என்பதை அந்த பாடல் வரிகளைப் பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது.
கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சில மணி நேரத்தில் அழித்துவிட்டது. அதை நினைத்து நினைத்து இன்றளவும் விவசாயிகள் அதிர்ச்சியடைகிறார்கள்.
இந்த நிலையில் தான் ஆலங்குடியில் அனைத்துக் கட்சிகள் சார்பில் தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் கஜா புயல் ஓராண்டு நினைவு.. அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மெய்யநாதன் எம்.எல்.ஏ கூறும் போது.. கஜா புயல் தாக்கி விவசாயிகள், சிறு வணிகர்கள், பொதுமக்கள் இழந்தது என்பது கணக்கிடமுடியாத இழப்பு. 30 வருடங்களின் வளர்ச்சி பின்நோக்கி சென்றுவிட்டது. அந்த மக்களை மீண்டும் கை தூக்கி விடவேண்டிய கடமை அரசாங்கங்களுக்கு உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் நிவாரணம் கேட்கவே பல போராட்டங்களை நடத்தி அதன் பிறகு பெற வேண்டி இருந்தது. நிவாரணம் கொடு என்று பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராட தூண்டிய அரசாங்கம் உரிமையை கேட்டதால் சாலை மறியல் செய்தார்கள், மக்களுக்கு இடையூறு செய்தார்கள், பணி செய்யவிடாமல் தடுத்தார்கள் என்று வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தினார்கள்.
எத்தனை போராட்டங்கள் நடத்தியும் கூட எதையும் பெற முடியவில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களே ஓய்ந்து போனார்கள்.
சரி அவர்கள் சொன்னதையாவது செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. புயலில் வீடுகளை இழந்த மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்கள். ஒரு வரும் ஆகிவிட்டது ஒரு வீடு கூட கட்டப்படவில்லை.
ராணுவக் கப்பலில் தென்னங்கன்றுகள் கொண்டு வந்து கொடுப்போம் என்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் சொல்லிவிட்டு போனதோடு அவரும் வரவில்லை. அவர் அனுப்பிய தென்னங்கன்றுகளும் வரவில்லை.
தென்னை, மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், செம்மரம், பயிர்கள் என்று பாதிக்கப்பட்ட அனைத்திற்கு கணக்கெடுத்து இழப்பீடு தருவதாக சொன்னார்கள். தென்னைக்கு கொடுத்த 1100 அந்த மரத்தை வெட்டி வெளியேற்றக் கூட போதவில்லை. மற்ற மரங்களுக்கு அடங்கலில் இல்லை. சரியான கணக்கு இல்லை என்று சொல்லி கொடுக்கவில்லை. தென்னைக்கும் பதிவு இல்லை என்று பாதிக்கும் மேல் கொடுக்கவில்லை.
அரயப்பட்டியில் புயலில் சாய்ந்த மின்கம்பங்களில் இருந்து ஒரு மாதத்திற்கு பிறகு மின்கம்பிகளில் மின்சாரம் செல்வதை அறியாமல் மிதித்து உயிர்விட்ட இருவருக்கு புயல் நிவாரணம் கொடுப்பதாக பொறுப்பான மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மக்களிடம் எழுதிக் கொடுத்துவிட்டு சடலங்களை உடற்கூறு ஆய்வுக்கு எடுத்தச் சென்றார்கள். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கணேசும், அமைச்சர் வியபாஸ்கரும் புயல் நிவாரணம் கிடைக்க உதவுவதாக சொல்லி அமைச்சர் தலா ஒரு லட்சம் நிதி கொடுத்து அஞ்சலியும் செலுத்திவிட்டு போனார். ஒரு வருடம் முடிந்துவிட்டது புயல் நிவாரணம் கிடைத்தபாடில்லை. இதற்காக மக்களோடு சேர்ந்து போராடிய என்மீது பல வழக்குகளை போட்டுள்ளனர்.
இப்படி அரசாங்கத்தி்ன், அதிகாரிகளின், அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டார்கள். இன்று நினைவு தினம் அமைதிப் பேரணி நடத்தினோம். அடுத்து தொகுதி மக்களை திரட்டி சொன்னதை செய்..! நிவாரணம் கொடு..! என்று விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றார்.