தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள், கூட்டணி என களத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனையை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 11.02.2021 அன்று 2-வது நாளாக சென்னையில் நடத்தியது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பங்குபெற்றார்.
இதனையடுத்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் நேற்று (16.02.2021) வெளியாகியிருந்தது. மேலும் ஏப்ரல் இறுதி வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும், மே 10 ஆம் தேதிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குனர் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 93 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் பெரும்பாலும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளே வாக்குச்சாவடிகளாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் 'ஸ்ட்ராங் ரூம்' ஆகவும் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் மே 3 ஆம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது சற்று குழப்பதை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள மே 3 ஆம் தேதிக்கும் முன்னரே சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் பொதுத்தேர்வு தேதியை அறிவித்ததில் எந்தக் குழப்பமும் இல்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.