கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளிலும். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளிலும் ஒரே நாள் இரவில் 30 சென்டிமீட்டர் மழை பெய்ததால் வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 20 ஆயிரத்திற்கும் மேல் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் வீராணம் ஏரி முழுகொள்ளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பைக் கருதி ஏரியில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்ட கிராம பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் நெற்பயிர் விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில் அந்தத் தண்ணீர் சிதம்பரம் வழியாக பாலமான் வாய்க்கால் வழியாக கடலுக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் பாலமான் வாய்க்காலின் கிளை வாய்க்கால் ஓரத்தில் சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட 33-வது வார்டு ரயிலடி இந்திரா நகர் உள்ளது.
இந்த நகரில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாய்க்காலில் வெள்ள நீர் அதிகமாக செல்வதால் இடுப்பளவு தண்ணீர் வீடுகளில் சூழ்ந்துள்ளது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் சமைக்க முடியாத சூழலில் இருந்து வருகின்றனர். இதையறிந்த ஆறுமுக நாவலர் அறக்கட்டளையினர், பள்ளி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என பல்வேறு தன்னார்வ அமைப்பினர் தினந்தோறும் உணவுகளை 3 வேலைகளிலும் வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சிதம்பரம் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இடுப்பளவு தண்ணீரில் சென்று வீடுகளில் உள்ளவர்களுக்கு உணவுகளை வழங்கினர். மேலும் பல்வேறு பொதுநலஅமைப்பினரை தொடர்பு கொண்டு இவர்களுக்கு உணவு, பால், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கித்தருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இவர்களுடன் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன் உடன் இருந்தார்.
இதனைப்பெற்றுக் கொண்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு இயந்திரம் உணவு வழங்காத நிலையில் உங்களைப் போன்றவர்கள் இப்படி இக்கட்டான நிலையில் உதவி செய்வதால் 3 வேளையும் உணவு சாப்பிடுகிறோம் என்றனர்.