தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகக் கடந்த சில நாட்களாகக் குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாவட்டம் சங்கராபரணி ஆற்றில் சிக்கி 11 ஆம் வகுப்பு படித்து வந்த லியோ என்ற மாணவன் மாயமானதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவத்தில் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் தொடர்ச்சியாக தேடுதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். செள்ளிப்பட்டு படுகை அணைப்பகுதி அருகே உடல் ஒன்று உப்பிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று உடலை மீட்ட மீட்புப் படையினர் பிரேதப் பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். கைப்பற்றப்பட்டது மாணவர் லியோவின் உடல் என்பது தெரியவந்துள்ளது. சமீபமாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் நீர்நிலைகளில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.