சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் மார்பளவு சிலையை நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து திறந்து வைத்தனர். மேலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம், நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் நாசர், கே.பாலசந்தரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து இயக்குனர் பாலச்சந்தரின் நினைவுகள் குறித்து, திரையுலக பிரபலங்கள் சிறப்புரையாற்றினர்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், "ரஜினிக்கு சிறப்பு விருது என்பது தாமதமான கவுரவம் என்றாலும், தக்க கவுரவம் தான். நான் வேறு பாணி, ரஜினி வேறு பாணி என்றாலும் ரஜினியின் உழைப்பு பிரமிக்கத்தக்கது. தளபதி என பட டைட்டிலை ரஜினி சொன்னபோது, கணபதி என காதில் கேட்டது. நாங்கள் இருவரும் பேசுவதை, பரிமாறிக்கொள்வதை கேட்டால் அசந்து போவீர்கள். ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என நானும், ரஜினியும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். எங்களுக்கு ரசிகர்கள் வரும் முன்பே நாங்கள் தான் எங்களுக்கான ரசிகர்களாக இருந்தோம்.

ரஜினியும், நானும் பேசிக்கொள்வோம் என்பதால், எங்களுக்கு நடுவில் போட்டு கொடுப்பவர்கள் குறைவு. முதல்படம் இயக்கும்போதே தெளிவாக இருக்கிறாரா? என மணிரத்னத்தை பார்த்து வியந்ததுண்டு. இரண்டு கோல் போஸ்ட் கட்டி எங்கள் இருவருக்கும் இடையே விளையாட்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒதுங்கனால், என்னையும் ஒதுங்கச்சொல்வார்கள், அதனால் வேலை செய்யுங்கள் என்று ரஜினியிடம் கூறினேன். ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 50- வது படம் மிக பிரமாண்டமாக அறிவிக்கப்படும். 44 ஆண்டுக்கு பிறகு ஐகான் விருது கொடுக்கிறார்கள். வந்த முதல் ஆண்டிலேயே ஐகான் ஆனவர் ரஜினி. ரஜினி கையையும், எனது கையையும் யாராலும் பிரிக்க முடியவில்லை" என்று இவ்வாறு பேசினார்.