சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனாக இருந்த சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் (வயது 18) விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றார். அதாவது குகேஷ் தனது 58வது நகர்த்திலில் வெற்றி வாகையை சூடினார். குகேஷ். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.
இந்நிலையில் இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு உலக செஸ் சாம்பியன் குகேஷ் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். நிகழ்வில் தமிழக முதல்வர், விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்குபெற்றுள்ளனர். சாம்பியன் கோப்பையை முதலமைச்சரிடம் காண்பித்து குகேஷ் வாழ்த்து பெற்றார். தமிழக அரசு சார்பில் குகேஷ்க்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
நிகழ்வில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, ''செஸ் என்றாலே சென்னை என்று நிரூபித்துள்ளார் குகேஷ். இன்னும் பல சாதனைகளை படைக்க குகேஷுக்கு தமிழக அரசு உறுதுணையாக நிற்கும். இளம் வயதில் சாதனை புரிய பெற்றோர்கள் மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளனர். அவர்களையும் பாராட்டுகிறேன். குகேஷ் வெற்றியால் தமிழ்நாடு முழுமைக்கும் விளையாட்டு போய் சேரும்'' என்றார்.
முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் பேசுகையில், ''உலக அளவில் செஸ் விளையாட்டில் தமிழ்நாடு முக்கிய இடம் பெற்றுள்ளது. நாட்டின் முதல் சர்வதேச மாஸ்டர், கிராண்ட் மாஸ்டர், பெண் கிராண்ட் மாஸ்டர் என எல்லோரும் தமிழகமே. நான் ஆண்டுகளுக்கு முன்பு நான் வெற்றி பெற்ற தருணத்தில் கலைஞர் பாராட்டு விழா நடத்தினார். இரண்டு உலக சாம்பியன்களையும், 31 கிராண்ட் மாஸ்டர்களையும் கொண்ட தமிழ்நாடு தான் உலக நாடுகளுக்கு செஸ்ஸில் முன்னோடியாக இருக்கும்'' என்றார்.
இதில் பேசிய குகேஷ், ''சென்னை கிரான்மாஸ்டர் போட்டி நடக்காவிட்டால் கேண்டிடேட்ஸ் தொடருக்கு போயிருக்க மாட்டேன். கேண்டிடேட்ஸ் தொடருக்கு தேர்வானதன் வாயிலாக மட்டுமே நான் இன்று உலக சாம்பியன் ஆனேன். உலக செஸ் சாம்பியன் கனவு நனவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.
தொடர்ந்து தமிழக முதல்வர் உரையாற்றுகையில், ''புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம பையன் குகேஷ். தன்னுடைய திறமையாலும் உழைப்பாலும் தன்னுடைய கனவை நனவாக்கி இருக்கிறார். 7 வயதில் பயிற்சிக்குள் நுழைந்து 9 வயதில் கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தை வென்று, 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று, இன்று உலக சாம்பியனாகி இருக்கிறார். இவை எல்லாவற்றையும் சாதிக்க குகேஷ் எடுத்துக் கொண்டது 11 ஆண்டுகள் தான். இதற்கு பின்னால் இருக்கக்கூடிய உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இலக்கை நோக்கிய பயணம் இதைத்தான் தமிழக இளைஞர்கள் எல்லோரும் இன்ஸ்பிரேஷனாக கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களை எல்லாம் அழைத்து குகேஷுக்கு இந்த பாராட்டு விழா நடத்துகிறோம். ஒரு குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்கும்'' என்றார்.