திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜூவல்லரியில் 13 கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு திருவாரூரில் 5 கிலோவுடன் முதல் நபரை கைது செய்தனர்.
நேற்று இரவு திருவாரூர் கமலாம்பாள் நகரில் சந்தேகத்திற்கிடமாக பைக்கில் சென்ற இருவரை பிடிக்கும் பொழுது ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார். மணிகண்டன் என்ற நபர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். அவரிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகள் பிடிபட்டன. அந்த தப்பி ஓடிய நபர் திருவாரூரைச் சேர்ந்த சீர்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.
மணிகண்டனை கைது செய்து திருவாரூர் நகர் காவல் நிலையத்தில் வைத்து நேற்று நள்ளிரவு வரை போலீசார் விசாரணை செய்தனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மணிகண்டன் திருச்சி கொண்டு செல்லப்பட்டார். மேலும் தப்பி ஓடிய சுரேஷ் சீராத்தோப்பை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனுடைய மைத்துனர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த கொள்ளையில் 5க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்திருக்கும் நிலையில் தொடர்ந்து சீராதோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷின் குடுப்பத்தாரான தாயார் கனகவல்லி, மாரியப்பன், ரவி, குணா ஆகிய 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி கிரைம் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை 4 மணி அளவில் இருந்து ரகசியமான இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து திருவாரூர் நகரம் முழுவதும் ரகசிய போலீசார் அந்தந்த இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாகனமும் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்த கொள்ளைச் சம்பவம் முருகன் தலைமையில் தான் நடந்திருப்பதாகவும், முருகன் பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம், வங்கி போன்ற இடங்களில் திருட்டில் ஈடுபட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல் இந்த கொள்ளை சம்பவத்தில் 8 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில் மணிகண்டனை கைது செய்துள்ளனர். மற்ற 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.