தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளது. ஈரோடு, சிவகிரியில் சாமி சிலையை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகில் உள்ள பொன்காளியம்மன் கோவிலில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நுழைந்து சாமி சிலையை சுத்தியலால் அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 20,000 குடும்பங்களுக்கு மேல் தங்களது குலதெய்வமாக வழிபாடு செய்து வரும் கோவிலில் சாமி சிலையை உடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த சிலை உடைப்பு சம்பவத்தால் ஈரோடு மாவட்டம் முழுவதும் அசாதாரண சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு சிலரின் சொந்த ஆதாயத்திற்காக இருவேறு சமூகங்களுக்கு இடையே பிரச்சினையை உருவாக்குவதற்கு மர்ம நபர்களை வைத்து திட்டமிட்டு சாமி சிலையை இரவில் உடைத்து இருக்கிறார்கள். சாமி சிலையை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நாளுக்குநாள் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை மற்றும் நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நகைக்கடையில் சுவரை துளையிட்டு சாதுரியமாக கொள்ளை அடிக்கும் சம்பவத்தையும் பார்த்தோம். தற்போது ஈரோட்டில் சாமி சிலை உடைப்பு நிகழ்வால் ஏற்பட்டிருக்கும் பதட்டமான நிலையை சரி செய்ய தமிழக அரசும், தமிழக முதலமைச்சர் அவர்களும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இதுபோன்ற சாமி சிலை உடைப்பு நிகழ்வுகள் தொடர்ந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய கலவரம் வெடிக்கும். எனவே தமிழகம் முழுவதும் மோசமாகி கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு மீது தமிழக முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.