கடந்த 13.04.2018 அன்று சிறைத்துறை தலைமை அலுவலகத்திலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள முதல் தலைமை காவலர்கள் 76 பேருக்கு கோவை, சேலம், வேலூர், கடலூர், புழல், நாகப்பட்டினம். புதுக்கோட்டை, பாளைங்கோட்டை, திருச்சி, அம்பாசமுத்திரம், திருப்பூர், மதுரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு டிரான்ஸ்பர் போடப்பட்ட உத்தரவு ஆணை வெளியானது.
இந்த டிரான்ஸ்பர் உத்தரவு ஆணை வெளியானவுடன் தமிழகம் முழுவதும் உள்ள சீனியர் சிறைகாவலர்கள் மற்றும் டிரான்ஸ்பருக்கு விண்ணபித்த சீனியர்கள் யாருக்கும் டிரான்ஸ்பர் கிடைக்காமல் புதியவர்களுக்கும், ஜீனீயாராக இருப்பவர்களுக்கு டிரான்ஸ்பர் வெளியானதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை எக்மோரில் உள்ள சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட முதல் தலைமை காவலர்கள் ஏடிஜிபியை சந்திக்க முயற்சி செய்தனர்.
இப்போது போடப்பட்ட டிரான்ஸ்பர்களில் ஒவ்வொன்றுக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் விளையாடி இருக்கிறது. லஞ்சம் வாங்கி கொண்டு தான் டிரான்ஸ்பர் போட்டார்கள். சைலேந்திரபாபு ஏடிஜிபியாக இருக்கும் போது கவுன்சிலிங் முறையில் டிரான்ஸ்பர் போடப்பட்டது. அந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று முறையிட்டனர். இதற்கெல்லாம் டிஐஜி கனகராஜ் தான் காரணம் அத்தனை டிரான்ஸ்பர்களையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்க உள்ளனர்.
அப்படி டிரான்ஸ்பர் போட பணம் கொடுத்து தான் போட வேண்டும் என்றால் எங்களுடைய வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு எங்களை சொந்தவூருக்கு டிரான்ஸ்பர் போடுங்கள் என்று கடிதத்தோட வர அதிர்ச்சியடைந்தார் ஏ.டி.ஜி.பி. இதனால், ஏ.டி.ஜி.பி காவலர்களை சந்திக்க மறுத்தார். மேலும் வரும் வெள்ளிக்கிழமை சந்திக்க வருமாறு கூறி காவலர்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இதற்கு ஓரு படி மேல் தீனதாயளன் என்கிற காவலர் இந்த டிரான்ஸ்பரை நிறுத்த வேண்டும். இங்கே டிரான்ஸ்பர் கேட்ட சீனியர்கள் யாருக்கும் டிரான்ஸ்பர் போடவில்லை. இதில் லட்ச கணக்கில் பணம் கை மாறியிருக்கிறது. நீங்கள் கவுன்சிலிங் முறையில் டிரான்ஸ்பர் போடவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஏ.டி.ஜி.பிக்கே போன் போட்டு தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இப்படி ஒரே நேரத்தில் தமிழக முழுவதும் உள்ள காவர்களின் கொந்தளிப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த ஏ.டி.ஜி.பி சுக்லா, போட்ட இந்த டிரான்ஸ்பரை மாற்ற முடியாது. நான் என்ன நடந்தது என்பதை விசாரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.