Skip to main content

காவடியாட்டம் ஆடிய காவலர்கள்; குமரியில் ருசிகரம்

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

kumari police celebrated traditional function 

 

குமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்து இருந்த போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக பத்மநாபபுரம் இருந்து வந்தது. திருவிதாங்கூர் மன்னா் பரம்பரையின் முதல் வாாிசாக இருந்த குலசேகர பெருமாளின் கட்டுப்பாட்டில் இருந்த அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மக்கள் எவ்வித குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், குற்றங்கள் குறைந்து நிம்மதியாக வாழவும், மழை பொழிந்து விவசாயம் செழித்து மக்கள் பசி, பட்டினி இன்றி வாழவும் அப்போது இருந்த தக்கலை காவல்நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து காவடி எடுத்து வேளிமலை குமாரகோவில் முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

 

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பிறகும், பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, தக்கலை காவல்நிலையம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து காவடி எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

kumari police celebrated traditional function 

 

நேற்று இந்த ஆண்டுக்கான காவடி எடுத்து செல்லப்பட்டது. இதற்காக காவல்நிலையம் வாழைக்குலை, இளநீர், பூக்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், மின் விளக்குகளால் காவல்நிலையம் ஒளியூட்டப்பட்டது. முருகன் பக்தி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் ஒலித்தது. நாதஸ்வரம், செண்டை மேளங்கள் என வாத்தியக் கருவிகளும் இசைக்கப்பட்டன. இதனை அங்கிருந்த மக்கள் வெகுவாக ரசித்தனா். பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காவல்நிலையத்தில் பூஜையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு காவடிகளை காவலா்கள் தோளில் சுமந்து காவடி ஆட்டம் ஆடினார்கள். தொடர்ந்து நெத்திப்பட்டம் கட்டிய யானையின் மீது உட்கார்ந்து பால் குடமும் எடுத்தனா்.

 

பின்னர் காவலர்கள் மற்றும்  பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆடிப்பாடி வேல்முருகன் கோஷத்துடன் 3 கி.மீ தூரம் சென்று குமாரகோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். காவலர்களுடன் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து பறக்கும் காவடி, தொட்டில்  காவடி, மயில் காவடி, வேல் காவடி, கதிர் காவடி என 50க்கும் மேற்பட்ட காவடிகளோடு ஆடி வந்த மக்களும் சென்றனர்.

 

பல நூறு ஆண்டுகள் கடந்த போதிலும் பாரம்பரியம் மாறாமல் தொடர்ந்து காவடி எடுத்து செல்வதைக் கடைபிடித்து வரும் தக்கலை காவல்நிலைய காவலர்களையும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹாிஹரன் பிரசாத் மற்றும் காவல்  ஆய்வாளர் நெப்போலியனையும்  அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்