ஈரோடு அருகே கார் டிரைவரை கடத்தி ரூ. 22 லட்சம் வழிப்பறி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் மற்றும் ஓலப்பாளையம் ஆகிய இடங்களில் இரும்புக் கம்பிகள் தயாரிக்கும் பிரபல நிறுவனம் உள்ளது. இதில் ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் மகன் சத்தியமூர்த்தி (47) கடந்த 17 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
ஓலப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து ஈங்கூரில் உள்ள நிறுவனத்துக்கு கலெக்ஷன் பணத்தை சத்தியமூர்த்தி கொண்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை ஓலப்பாளையத்தில் இருந்து ஈங்கூர் அலுவலகத்துக்கு ரூ. 22 லட்சத்தை சத்தியமூர்த்தி காரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அவர் ஓலப்பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் காரை நிறுத்தி முகவரி கேட்பது போல சத்தியமூர்த்தியிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
அப்போது 3 பேரில் ஒருவர் திடீரென ஹெல்மெட்டால் சத்தியமூர்த்தியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த சத்தியமூர்த்தியை மீதி இருவரும் கத்தியை காட்டி மிரட்டி காரில் ஏற்றி தாங்கள் சொல்லும் இடத்துக்கு வண்டியை ஓட்டிச் செல்லுமாறு கூறி மிரட்டியுள்ளனர். ஒருவர் பைக்கில் பின்தொடர மீதமுள்ள 2 பேர் காரில் சத்தியமூர்த்தியை மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் ஈரோடு அருகே உள்ள ரங்கம்பாளையம், குறிஞ்சி நகர் பகுதிக்கு வந்தவுடன் காரில் இருந்த ரூ. 22 லட்சத்தை பறித்துக் கொண்டு சத்தியமூர்த்தியை கை, கால்களை கட்டி காருக்குள் போட்டுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
வெகு நேரமாக கார் அங்கு நிற்பதைக் கண்ட அப்பகுதியினர் காரின் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது காருக்குள் சத்தியமூர்த்தி கிடப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியினர் சத்தியமூர்த்தியை மீட்டனர். அதன்பின் அங்கிருந்து வந்த சத்தியமூர்த்தி தனது நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து தன்னை காருடன் கடத்தி சென்று ரூ. 22 லட்சத்தை பறித்துச் சென்றவர்கள் குறித்து சென்னிமலை போலீசில் சத்தியமூர்த்தி புகார் தெரிவித்தார். அதன்பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து காருடன் டிரைவரை கடத்திச் சென்று ரூ. 22 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.