Skip to main content

போதை மக்களுக்காக புதிதாக போதை ஸ்டாம்ப்..! கேரளா இளைஞர் கைது!

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
Pidungapatta Pothai Kalan


வருகிற 26-ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினம் கொண்டாடக்கூடிய நிலையில் இருந்து வருகிறோம். அந்த அளவுக்கு குடிமகன்கள் குடிக்கு அடிமையாகி விட்டதுனாலயே அதை ஒழிப்பதற்கு அரசும் விழா எடுத்து வருகிறது. சமீப காலமாகவே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைக்கு அடிமையாகி சரக்கு, சாராயம், கஞ்சா, மாத்திரை சொல்யூசன், ஆம்லெட், காளான் இப்படி பல வகைகளில் போதையை ஏற்றிக்கொண்டு வருபவர்கள் தற்போது ஸ்டாம்ப் மூலமும் போதையை ஏற்றி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் சுற்றுலாத்தளம் என்பதால் தினசரி ஆயிரக்கணக்கானோர் கோடைக்கு வந்து கோடை இளவரசியின் இயற்கையின் அழகை ரசித்துவிட்டு போவார்கள். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்கேயே இரண்டு அல்லது மூன்று நாள் தங்கி கீழ்மலை முதல் மேல்மலை வரை சென்று இயற்கையை ரசித்துவிட்டும் போவார்கள். இப்படி வரக்கூடிய சில சுற்றுலாப்பயணிகள் மேல்மலையில் விளையக்கூடிய போதைக்காளான்களை வாங்கி போதைக்கு அடிமையாகியும் வருகிறார்கள்.

 

 

அதுபோல் இப்படி போதை காளான் சாப்பிட்டதில் கேரளா, ஆந்திராவைச் சேர்ந்த சில வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இறந்தும் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது போதை ஸ்டாம்புகளை கொடைக்கானலில் உள்ள சில லாட்ஜ்கள் மற்றும் காட்டேஜ்களில் விற்பனை செய்து வருவதாக எஸ்.பி. சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காக்கிகள் லாட்ஜ்களையும், காட்டேஜ்களையும் அதிரடி சோதனை நடத்தியது பேத்துப்பாறையில் காட்டேஜை நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த நிஷாந்த் போதை ஸ்டாம்ப் விற்பனை செய்து வந்தது தெரிந்ததின் பேரில் நிஷாந்தை காக்கிகள் கைது செய்தனர். இப்படி கைது செய்யப்பட்ட நிசாந்தின் காட்டேஜில் போதைப் பொருளான 820 மில்லி. ஆசிஷ் ஆயில், 80 கிராம் எல்.எஸ்.டி எனப்படும் இரண்டாயிரம் போதை ஸ்டாம்புகள் மற்றும் லேப்டாப், செல்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
  kodai


இந்த போதை ஸ்டாம்ப் எப்படி தயாரிக்கப்படுகிறது என சில காக்கிகளிடம் கேட்டபோது...

போதை பொருளான ஆசிக் ஆயிலை பேப்பரில் ஊற்றி ஊறவைத்து எடுத்து அதன்பின் நன்றாக காயவைக்க வேண்டும். இப்படி போதை கலந்த காய்ந்த பேப்பரை எடுத்து ரப்பர் ஸ்டாம்ப் போல் கட் செய்து போதை ஸ்டாம்பாக சுற்றுலா பயணிகளுக்கும், போதை மக்களுக்கும் ஒரு போதை ஸ்டாம்ப் இருநூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை விற்பார்கள். இப்படி வாங்கக்கூடிய போதை ஸ்டாம்ப்பை நாக்குக்கு கீழ் ஒட்டவைத்தாலே போதும். எட்டு மணி நேரத்திற்கு போதையில் மிதக்கலாம். அந்த அளவுக்கு போதை ஸ்டாம்பில் போதை இருக்கிறது. அதோடு இந்த போதை ஸ்டாம்ப்பை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் விரும்பி வாங்கி வந்திருக்கிறார்கள். அதனால் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் நிஷாந்திற்கு தொடர்பு வைத்திருக்கிறானா? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம் என்று கூறினார்கள்.
 

nisanth


இதுசம்மந்தமாக, எஸ்.பி. சக்திவேலிடம் கேட்டபோது... அந்த எல்.எஸ்.டி. போதைப் பொருளை சென்னையில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு முதன் முறையாக கொடைக்கானலில் பயன்படுத்திய ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த நபர் பெங்களுரிலிருந்து ஆசிஸ் ஆயிலை 75ஆயிரத்திற்கும், புனேயில் இருந்து போதை ஸ்டாம்ப்புகளை (ஒரு ஸ்டிரிப்) 25ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். இந்த போதை பொருட்களை ஆன்லைன் மூலமும் விற்பனையாகி உள்ளது. அந்த நபர் போதைப் பொருள் வாங்கியதாக கூறி வருவதில் முரண்பாடான தகவல்களும் உள்ளது. அதனால் சர்வதேச கும்பலுடன் இந்த நிஷாந்துக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என்று கூறினார்!

சார்ந்த செய்திகள்