Skip to main content

கேரளாவில் பறவைக் காய்ச்சல்...தமிழக எல்லையில் தடுப்பு முகாம்!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

கடந்த ஒரு வருடமாகக் கேரளாவில் அடங்கி ஒழிந்திருந்த ஸ்வைன்ஃபுளூ எனப்படும் பறவைக் காய்ச்சல் தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. ஒருபுறம் அச்சுறுத்தும் கரோனா மறுபக்கம் பறவைக்காய்ச்சல் மத்தள இடி நிலையிலிருக்கிறது கேரளா.
 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் கோழிப்பண்ணை கிராமமான கொடியாத்தூர், வென்கேரி இரண்டு கிராமங்களிலுள்ள பெரிய கோழிப்பண்ணைகளின் கோழிகள் கொத்துக் கொத்தாய் செத்து விழுந்திருக்கின்றன. தகவல் போய் அவைகளைச் சோதனை செய்த கேரள கால்நடை மருத்துவர்கள் அவைகள் பறவைக் காய்ச்சல் வைரஸ்களால் தாக்கப்பட்டு மடிந்ததைக் கண்டறிந்தனர். இது தொடர்பாக அலர்ட் ஆன கேரள அரசின் சுகாதாரத்துறை அமைச்சரான சைலஜா. அந்த இரண்டு கிராமங்களின் கோழிப்பண்ணை கோழிகளை அழிக்க உத்தரவிட, அவைகள் அழிக்கப்பட்டு மேலும் வைரஸ்கள் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

kerala  Bird flu issues tamilnadu kerala border

இதன் தாக்கமாக அண்டை மாநிலமான தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் கேரள- தமிழக எல்லையான செங்கோட்டையின் புளியரை பகுதியின் சுங்கச்சாவடியில் தீவிரத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கே சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு முகாமே ஏற்படுத்தியுள்ளனர். கேரளாவிலிருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு பறவையினங்கள் கோழி, வாத்து, கோழி முட்டை, கோழிக்களுக்கான தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் காய்கறி உணவுப் பொருள்கள் மற்றும் இலகு ரக வாகனம் முதல் கனரக வாகனம் வரை சோதனையிடப்பட்டு கிருமி நாசினியான குளோரின்-டை-ஆக்ஸைடு தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

kerala  Bird flu issues tamilnadu kerala border

கேரளாவிலிருந்து வாத்து, முட்டை, கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அதே போன்று கோழிகளை கேரளாவுக்கு ஏற்றிச் செல்லும் தமிழக வாகனங்கள் திரும்பி வரும் போது கோழிகளுடன் அசுத்தம் தென்பட்டால் அந்த வாகனங்களையும் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்கிறார் கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குனரான அசன் இப்ராஹிம்.

kerala  Bird flu issues tamilnadu kerala border

கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் தாக்கம் காரணமாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் கிலோ 160- க்கு விற்கப்பட்ட கறிக்கோழியின் விலை 100 ஆகவும் ரூ 5 லிருந்து 3.20 பைசாவாக முட்டையின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளன. தற்போதைய சமூகச் சூழல் காரணமாகவும் மக்களின் பல்வேறு நிலை காரணமாகவும் கறிக்கோழியின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கோழி வியாபாரிகளின் தரப்பினரே கூறுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற பெட்டிகள் - பயணிகள் அதிர்ச்சி

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Coaches derailed from Kerala Ernakulam Express train

கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரயில் நேற்று(28.6.2024) காலை எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு சாலக்குடியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலில் 20 பெட்டிகள் உள்ள நிலையில் அதில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். காலை 10 மணியளவில் வள்ளத்தோடு பாலம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக ரயில் என்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்று தனியாகச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக செயல்பட்டு என்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினர். பாலத்தைக் கடக்க ரயிலின் வேகம் குறைக்கப்பட்டதால், கழன்று சென்ற ரயில்பெட்டிகள் சிறிது தூரம் சென்று தானாகவே நின்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சூர்,பாலக்காடு ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் கழன்ற சென்ற ரயில் பெட்டிகளை மற்றொரு ரயில் என்ஜின் உதவியோடு இழுத்து வந்து, சம்பந்தப்பட்ட ரயிலுடன் இணைத்தனர். இதையடுத்து 4 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது. 

இதுகுறித்து பேசிய ரயில்வே உயர் அதிகாரிகள், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து பெட்டிகள் கழன்று  சென்றது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அதிகாரிகளின் மெத்தனப்போக்கு; பரிதாபமாகப் பிரிந்த இரண்டு உயிர்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Two passed away in tree falls near Hosur

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சியின் 45-வது வார்டுக்கு உட்பட்டது குஸ்னி பாளையம். இப்பகுதியில், உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலை ஓரம் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. 

இந்த நிலையில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ள சாலை வழியாக கழிவுநீர் அகற்றும் லாரி ஒன்று சென்றது. அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் திடீரென பழமையான ஆலமரம் முறிந்து விழுந்தது. இதில், எதிர்பாராத விதமாக கழிவுநீர் அகற்றும் லாரி சிக்கிக் கொண்டது. பிரமாண்ட மரம் விழுந்த வேகத்தில் லாரியின் முன் பகுதியே நசுங்கியதில், கழிவு நீர் லாரியின் உள்ளே இருந்த 2 பேர் சிக்கிக் கொண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பகுதிவாசிகள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மத்திகிரி போலிசார், ஒசூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், ராட்சத மரம் விழுந்ததால் லாரியின் முன்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால், உள்ளே சிக்கிய இருவரை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது. 

இருப்பினும், விரைந்து தீயணைப்பு வீரர்கள் ஆலமரத்தை வெட்டி அகற்றும் முயற்சியில் இறங்கினர். சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்புப் பணியின் பிறகு லாரியின் உள்ளே சிக்கிய இருவரின் உடல் மீட்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட இருவரும் உடல் நசுங்கி முன்பே உயிரிழ்ந்தது தெரியவர, மத்திகிரி போலிசார் இருவரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்தவர்களின் பின்னணி குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இறந்தது பாளையம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான லாரி ஓட்டுநர் மாரப்பா என்றும், அவருடன் இருந்த மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான வெங்கடேஷ் என்பதும் தெரிய வந்தது. இருவரும் கழிவுநீர் அகற்றும் வாகனத்தில் வேலை செய்து வருவதும், பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஓசூர் நோக்கி கழிவுநீர் வாகனத்தில் சென்றபோது ஆலமரம் விழுந்து உடல் நசுங்கி இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், முறிந்த விழுந்த பழமையான ஆலமரம் குறித்து அப்பகுதியினர் 15 நாட்களுக்கு முன்பே வருவாய்த்துறையினருக்கு புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் விசாரணையில் அம்பலமானது. அதிகாரிகள் மெத்தனத்தால் 2 உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இனியாவது ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து அதிகாரிகள் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடும் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே, மரம் விழுந்ததில் ஏற்பட்ட இடர்பாடுகளை அதிகாரிகள் சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.