சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.
அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்க மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பாகப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “பலரும் பூரண மதுவிலக்கு பற்றி பேசுகின்றனர், ஆனால் அப்போதே கலைஞர் கூறியிருந்தார். கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி எனச் சுற்றி இருக்கும் மாநிலங்களில் மதுவிற்கும் போது தமிழ்நாடு மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக பாதுகாக்கப்பட முடியும்? உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை.
ஆனால் அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான கிக் இல்லாததால், கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தைக் குடிக்கின்றனர். அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு SOFT DRINK போல மாறிவிடுகிறது. எனவே விட்டில் பூச்சி விளக்கில் போய் விழுவதை போன்று விழுந்து செத்து விடுகின்றனர். அதற்காக தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது. மனிதனாய் பார்த்துத் தான் திருந்த வேண்டும். கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். ஆனால் எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்” எனக் கூறினார்.