அண்மையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம், ‘ஜெயலலிதா நினைவு இல்லம்’ என மாற்றப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கால், நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தீர்ப்பின்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடனே 'ஜெ'- நினைவு இல்லம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கில், ''மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது'' எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, ''இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதுபோல நினைவு இல்லங்கள் அமைக்கப்போகிறீர்கள். இதே நிலை தொடர்ந்தால் அமைசர்களின் வீடுகளும் நினைவு இல்லமாக மாற்றப்படும் போல. ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றிய தமிழக அரசின் செயலை நியாயப்படுத்த முடியாது. நீதித்துறைக்குப் பல நீதிபதிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அவர்களுக்கு சிலை வைக்க நீதிமன்றத்தில் அனுமதியில்லை'' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.