பேட்டி கொடுக்கும் இனியவன்
கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீதிக்கு வந்துப் போராடிய பொதுமக்களை ஆளும்கட்சியினர் தூண்டுதலோடு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துவரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதால் வழக்காகி காவல் துறையின் அதிரடி கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்துவரும் இளைஞர் இனியவன் தற்கொலை முயலும் காட்சி ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி பொது மக்களையும் விவசாயிகளையும் கலங்கடிக்க செய்திருக்கிறது.
கடந்த மாதம் 16ம் தேதி கரை கடந்த கஜா புயலின் கோரதாண்டவத்தில் வேதாரண்யம் தலைஞாயிறு, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் சின்னாபின்னமாகின. வீடுகளையும், உடமைகளையும் இழந்த பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். ஆளும் அதிமுகவினரோ அலட்சியம் காட்டி மெத்தனமாக இருந்து வந்தனர்.
இந்த சூழலில் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கடந்த மாதம் 18ஆம் தேதி நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்போடு வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரும் முற்றுகையிடப்பட்டது. அதன் விளைவாக போலீசார் பொதுமக்கள் மீது லத்தி சார்ஜ் செய்தனர். பொதுமக்களும் பதிலுக்கு காவல்துறை மீது தாக்குதல் நடத்தினர். அதில் 11 காவல்துறையினர் காயம் பட்டதாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.
அந்த சம்பவத்தில் இனியவன், கார்த்தி, மணிகண்டன், தேவா, முருகேசன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்திற்காக கைது செய்வதை தள்ளிப் போட்டிருந்தனர். அதன்பிறகு ஒரு மாதம் தாமதமாக 22 ஆம் தேதி நள்ளிரவில் கொத்தாக, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் உறங்கிக்கொண்டிருந்த அப்பாவிகள் 44 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்கில் இனியவன் தலைமறைவானார். மற்றவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் கைதுகள் நடந்த வண்ணமே இருந்தது இறுதியாக இந்த மாதம் 24-ஆம் தேதி மதியம் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த இருவரை கைது செய்தனர். இதை கேள்விப்பட்டு மனம் உடைந்து போன இனியவன் இனி வாழ்வதற்கான சாத்தியம் இல்லை.
காவல்துறையினர் இனி நம்மை சும்மா விடமாட்டார்கள் என்கிற மன வேதனைக்கு உள்ளாக்கி வயலுக்கு தெளிக்கும் கொடூரமான விஷ மருந்தை வாங்கி கையில் வைத்துக்கொண்டு தனது முகநூல் பக்கத்தில் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியோடு சில செய்திகளையும் பதிவிடுகிறார்.
வாட்ஸ் அப்பில் பேசிய இனியவன்
அதில் ’’தலைஞாயிறு பகுதியில் நடக்கிற சம்பவம் என்னன்னு எல்லாருக்கும் தெரியும் இதற்கு யார் காரணம்? எல்லாருக்கும் நல்லா தெரியும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வேண்டுகோள் மட்டும் தான் வச்சேன். பொது பிரச்சனைக்காக போராடின என்னை. நான்தான் தூண்டுதல் செய்ததாக முக்கிய குற்றவாளியாக கேஸ் போட்டாங்க. நாலு நாள் சாப்பிடல. தூக்கம் இல்ல. ஓடிக்கிட்டே இருக்கேன். பொது நன்மைக்குத்தான் போராடினேன். நான் தீவிரவாதியோ, கொலை குற்றவாளியோ, குற்றப் பின்னனியுடையவனோ இல்லை. இதற்கு முன்னாடி என் மீது வழக்கு எதுவும் இல்லை. இதுக்கெல்லாம் மக்கள் தான் பதில் சொல்லணும். இன்னும் அரை மணி நேரத்துல செத்துடுவேன். என்னோட அப்பாவையும் அண்ணன். தங்கச்சிய பத்திரமா பார்த்துக்கோங்க.’’ என்று பதிவிட்டு கொண்டே விஷ மருந்து குடிக்கிறார். இந்த காட்சி பலரையும் பதறவைத்தது.
ராஜேந்திரன்
இனியவனுக்கு என்ன நடந்தது? தற்போது எப்படி இருக்கிறார்? என அவரது நண்பர் ஒருவரிடம் தொலைப்பேசி மூலம் விசாரித்தோம், ‘’இனியவனின் குடும்பம் மிக நேர்மையான விவசாயக் குடும்பம். அவரது அப்பா ராஜேந்திரன் முன்னாள் பேரூராட்சி தலைவராக இரண்டு முறை இருந்தவர். ஒரு முறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். பெருசா சம்பாதிக்காதவர். மக்களுக்காக வீதிக்கு வந்து போராடக்கூடியவர். திமுக நகர செயலாளராக இருந்தவர். பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். ஓ.எஸ். மணியனின் தவறுகளை நேருக்கு நேர் சுட்டிக் காட்டுவார். மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் எந்த அதிகாரியாக இருந்தாலும் தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டார். துணிச்சலான போராளி அவர் வழிகாட்டுதலின் பேரில் அவரது பிள்ளைகளையும் வளர்த்தார். அவருக்கு இரண்டு பசங்க, அதில் ஒருவன் தான் இனியவன். இனியவனின் அப்பா ராஜேந்திரனும், அண்ணனும் தற்போது சிறையில் உள்ளனர். இனியவன் காவல்துறையின் முதற்கட்ட கைதுக்கு பிறகு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்த சூழலில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது வேதனையா இருக்கு. அவருக்கு நாட்டு மருந்து கொடுத்து அவரை காப்பாற்றியிருக்கிறோம், இன்னும் படுத்தப்படுக்கையாக தான் இருக்கிறார். புயலால் பாதித்த சோகத்தைவிட ஆதிக்க காக்கிகளின் கொடுமையே எங்களுக்கு பெரும் வேதனைய கொடுக்குது என்கின்றனர்.
இனியவன் மேல் இவ்வளவு கோபம்வர காரணம் என்ன? அவர் அப்படி என்னதான் முன்னாடி பேசினார்?
‘’ கடந்த மாதம் 18 ம் தேதி நிவாரணம் கேட்டு தலைஞாயிறு கடைவீதியில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தை தலைமை ஏற்றுநடத்திய பலரும் தற்போது சிறையில் உள்ளனர். அந்த போராட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஆக்ரோஷமாக பேசினார் இனியவன்.
அதில் ’’முதலமைச்சர் ஐயா வணக்கம், எடப்பாடி ஐயா சேலத்தில் வந்து பாலத்தை திறக்குறீங்க, மத்தபடி உங்க பகுதியில் எல்லாத்தையும் சுத்தி பாக்குறீங்க. மோடிக்கிட்ட தகவல் சொன்னீங்களான்னு கூட எங்களுக்கு தெரியல ஐயா. தஞ்சாவூருக்கு வந்தீங்க, ஆனா திருவாரூர், நாகைக்கு வரல. நாங்க எல்லாம் மழையிலதான் நிற்கிறோம், ஆனா உங்களால் வர முடியல. எங்களால மேல உக்காந்திருக்கீங்க. ஆனா உங்களால இந்த பக்கம் வர முடியாதா ஐயா. உங்க அம்மா ஜெயலலிதா இறந்த தொகுதியான ஆர்கே நகர்ல இடைத்தேர்தலுக்கு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தீங்களே ஐயா. நாங்கள் குடிசை இழந்து நிற்கிறோம். குடிசைக்கு பத்தாயிரம் ரூபா தருவதே தயங்குறீங்களே அய்யா. பல்லாயிரம் கோடிக்கு மணிமண்டபம் கட்ட துடிக்கிறீங்க. ராமருக்கு, பட்டேலுக்கு சிலைவைக்க பல ஆயிரம் கோடிகளை ஒதுக்குறீங்களே அய்யா. கோடிக்கோடியா கொள்ளை அடிச்சி வச்சிருக்கீங்களே எடப்பாடி அய்யா. பணம் மதிப்பிழப்பால பாலுக்கு கூட விலைய ஏற்றி எங்க தலையில சுமத்தி நீங்க கொள்ளையடிச்சீங்களே. எங்களை திரும்பி பார்க்ககூடாதா.’’ என அவரது பேட்டி பரபரப்பாக வெளியாகின இதுதான் அவர் முக்கிய குற்றவாளியாக மாறுவதற்குக் காரணம். என்கிறார்கள் காக்கிகள் வட்டாரத்தில்.
இனியவனின் தற்கொலை முயற்சி சம்பவம் முகநூலில் பரவியதையடுத்து, இனியவனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருவதோடு, இனியவனின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.