கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் என்று கூறி இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் எம்.எல்.ஏ பேசியதாவது:- “கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. சட்டமன்றத் உறுப்பினர் செந்தில்குமார் கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் போது கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொடுத்த போது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அன்றைய தினமே நடவடிக்கை எடுத்து வந்திருந்தால் தற்போது கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்து இருக்காது. அ.தி.மு.க.வுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர்கள் எஸ்.பி.யிடம் சொன்ன போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தி.மு.க பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
கள்ளச்சாராயம் மூலம் ஏற்பட்ட இத்தனை உயிரிழப்புக்கு தி.மு.க அரசுதான் காரணம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை தி.மு.க அரசின் ஏவல் துறையாக உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சினை காப்பாற்ற சாராயம் தயாரித்த நபர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் அவர்களை என்கவுண்டரில் போடுங்கள். அப்பதான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும்.” இவ்வாறு பேசினார்.