2019, 2020- ஆம் ஆண்டுக்கான 'கலைமாமணி' விருதுகளை கலைஞர்களுக்கு வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் 128 பேருக்கு 'கலைமாமணி', 6 பெண் கலைஞர்களுக்கு 'ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி' விருது வழங்கப்பட்டன. நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ராமராஜன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சரோஜா தேவி உள்பட 134 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 'கலைமாமணி' விருது பெற்றவர்களுக்கு பரிசாக 5 சவரன் தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மேலும், 'கலைமாமணி' விருதுபெற்று வறுமையில் வாடும் நலிந்த கலைஞர்கள் 9 பேருக்கு தலா ரூபாய் 50,000 நிதி வழங்கப்பட்டது.