வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திராவிட கழகத்தின் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டத்தின் உள் நோக்கம் குறித்து பொது மக்களிடம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டம் என்பது முற்றிலும் ஜாதி அடிப்படையில் ஆன திட்டம். இந்த காலத்திலும் மக்களை வேறுபாடு செய்ய இவர்கள் முயற்சிக்கின்றனர். பெரியார் ஜாதி ஒழிப்புக்கு பாடுபட்டவர். அதனுடைய பிரதிபலன் தான் தற்பொழுது மகளிர்கள் படித்து மற்றும் தற்போது வேலைகளில் பணிபுரிகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள் அதற்கு என்னுடைய விளக்கம் என்பது, இதுதான் நமக்கு இறுதி தேர்தல் என்று பாஜக நினைத்துள்ளது மற்றும் நாம் அவர்களுக்கு இறுதி தேர்தலாக இதனை முடித்து விட வேண்டும்.குலத் தொழிலை பொதுவகையான அறிமுகத்தை செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஜிஎஸ்டியில் நம்மிடம் பெரும் தொகையை பெற்று விட்டு திருப்பிக் கொடுக்கிறேன் என்று சொற்ப தொகையை திருப்பிக் கொடுக்கின்றார்கள்.
நீட் தேர்வால் பல மாணவர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஆந்திரா பிரதேசம் மாநிலத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். யார் நினைத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிர் ஒன்றிய பாஜக அரசிடம் இருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தை கட்டிவிட்டு அனைத்து உறுப்பினர்களும் அழைத்து பெரிய மசோதாவை கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லி ஏமாற்றி விட்டனர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, “தமிழ் நாடு ஆளுநர் மாளிகை வெளியில் நடந்திருப்பது காவல்துறையே முழு விவரத்தை தெரிவித்துள்ளது. தமிழ் நாடு காவல்துறை தலைவர் ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவம் குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட்டார். நாங்கள் அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. எதையாவது சொல்லி தமிழ்நாடு அரசிற்கு அவப்பெயரை தேடித்தர சிலர் முயற்சிக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார் வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை இந்த ஆளுநர் தமிழகத்தில் இருக்கட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். எந்த வேலை ஆளுநர் செய்ய வேண்டுமோ அதை அவர் செய்வதில்லை. எந்த வேலை பார்க்கக் கூடாதோ அதைத்தான் அவர் பார்க்கின்றார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் 400 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.