போலி ஹால்மார்க் முத்திரை பயன்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தங்க நகைகள் திருத்தச் சட்டம் 2023இன் படி எச்.யூ.ஐ.டி. குறியீடு இல்லாமல் தங்க நகைகள் விற்பனை விற்பனை செய்யக் கூடாது எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இதனையும் மீறி சட்டவிரோதமாக முறையான எச்.யூ.ஐ.டி குறியீடு இல்லாமல் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள நகைக்கடையில் ஒன்றில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 1643 கிராம் தங்க நகைகளின் மீது போலியாகப் பொறிக்கப்பட்ட பி.ஐ.எஸ் சின்னம் இடப்பட்டிருப்பதும், போலி ஹால்மார்க் முத்திரை இடப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த சோதனையில் எச்.யூ.ஐ.டி. குறியீடு இல்லாமலும் நகைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். அதோடு கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.