ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது துப்பாக்கி சூடு நடத்திய போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜமைக்கா நாட்டில், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், உள்ளிட்ட சில இளைஞர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்கள் இந்த சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பணம் மற்றும் மளிகை பொருட்களைக் கொள்ளையடிப்பதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே சமயம் உயிரிழந்த விக்னேஷின் உடலை உடனடியாக இந்தியாவிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தான் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது காயமடைந்த இளைஞர்கள் கதறி அழுது கூச்சலிடும் காட்சிகள் பார்ப்பவர்கள் மனதை பதை பதைக்க வைக்கிறது.