நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், அரசியல் சாசன சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (18.12.2024) போராட்டம் நடத்தினர். அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைக்குரிய பேசவில்லை என்றும், எதிர்க்கட்சியினர் அமித்ஷா கூறியதை பொய்யாக திரித்து கூறுகின்றனர் என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து திரித்து சிலர் குறை சொல்கிறார்கள். அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான். அம்பேத்கரை பற்றி நேரு குறை கூறி இருக்கிறார். காங்கிரஸ்தான் இரண்டு முறை அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது. ஆனால் அம்பேத்கரின் வரலாற்று புகழை உலக நாடுகள் முழுவதும் கொண்டு சென்றது பாஜக அரசுதான். அம்பேத்கர் குறித்து எனது முழு பேச்சையும் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை பதவி நீக்க வேண்டும் என கைகளில் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் இன்று (19-12-24) நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இருக்கின்றனர். காங்கிரஸ் ஒருபுறம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியதாகக் கூறி பா.ஜ.க எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பாபாசாகேப் அம்பேத்கரை அவமரியாதை செய்ததற்காக காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பாவம் செய்திருக்கிறது. மொத்தக் குடும்பமும், பாபாசாகேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை. காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம் இருக்க வேண்டும், தங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக மௌன சபதம் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.