காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் செட்டிதாங்கல் கிராமத்தில் டிபன் மற்றும் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு அருகிலேயே கீழக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் டீ மற்றும் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். வெங்கடேசன் கடையில் வியாபாரம் குறைவாக இருந்துள்ளதாகவும், அதேசமயம் சுந்தரம் கடையில் வியாபாரம் நன்றாக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி வெங்கடேசன் அருகில் இருந்த சுந்தரம் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் இட்லிக்காக மாவு அரைத்தபோது அதில் வெங்கடேசன் யாருக்கும் தெரியாமல் அந்த மாவில் எலிமருந்தை கலந்து விட்டு வந்து விட்டார். இதைக் கண்டுபிடித்த சுந்தரம் உடனடியாக இது குறித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் புதன்கிழமை மாலை கடைக்குள் அத்துமீறி நுழைந்திற்காக வெங்கடேசனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ1000 அபராதமும், மாவில் விஷம் கலந்ததற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.