தீபாவளி பண்டிகை உற்சாகத்தில், சேலம் மாவட்டத்தில் 17.82 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழக அரசுக்கு முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக டாஸ்மாக் மது விற்பனை இருந்து வருகிறது. சேலம், சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் நிர்வகிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் மொத்தம் 5124 மதுக்கடைகள் உள்ளன.
வார நாள்களில் 60 கோடி ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனை ஆகிறது. சனி, ஞாயிறுகளில் சராசரி மதுபான விற்பனை 70 கோடி ரூபாயாக உள்ளது. பண்டிகை காலங்களில் தொடர் விடுமுறை தினங்கள் என்பதால் வழக்கத்தை விட மதுபான விற்பனை களைகட்டும்.
நிகழாண்டில், தீபாவளி பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் மதுபானங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 211 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. விழாக்காலம் என்பதால் மது பிரியர்கள் தீபாவளிக்கு முதல் நாளே உற்சாகத்தில் திளைத்தனர். தீபாவளிக்கு முந்தைய நாளான அக்.26ம் தேதி பிராந்தி வகை மதுபானங்கள் 14067 பெட்டிகளும், பீர் வகை மதுபானங்கள் 8354 பெட்டிகளும் என மொத்தம் 9.018 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனையை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டில் பிராந்தி வகைகள் 8.42 சதவீதமும், பீர் வகைகள் 10.29 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதேபோல், தீபாவளியன்றும் (அக். 27) மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. அன்று மட்டும் 12218 பெட்டிகள் பிராந்தி வகை மதுபானங்களும், 12536 பெட்டிகள் பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. பண்டிகை தினத்தில் மட்டும் 8.81 கோடி ரூபாய்க்கு Ôகுடிமகன்கள்Õ மதுபானங்களை குடித்துத் தள்ளியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு தீபாவளி நாளில் நடந்த மது விற்பனையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் பிராந்தி வகைகள் 10.62 சதவீதமும், பீர் வகைகள் 19.83 சதவீதமும் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆக, தீபாவளி அன்றும், அதற்கு முந்தைய நாளிலும் மட்டுமே சேலம் மாவட்டத்தில் 17.82 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியிருக்கிறது.