திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் ஜேக்டோ – ஜியோ சார்பில் மாநில உயர்மட்டக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ் வரவேற்றார். அன்பரசு தலைமை தாங்கினார், வி.எஸ். முத்து ராமசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் காலத்திலும், ஜாக்டோ – ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற 28 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும். மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொருளாளரும், மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளருமான திருச்சி நீலகண்டன் உட்பட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் நன்றி கூறினார்.