தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (7.8.2023) சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பொறியியல் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள திறன் சாதனை கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
மேலும் ‘நான் முதல்வன்’ திட்டத்தை பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விரிவுபடுத்தி, நான் முதல்வன் ஹேக்கத்தான் இணைய தளம், காலணி உற்பத்தி தொழில்நுட்பம், ஆயத்த ஆடை உற்பத்தி, சரக்கு நகர்வு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் ஒரு புதிய இளங்கலை தொழிற்கல்வி பட்டப்படிப்பு, கலைஞர் நூற்றாண்டு இணையதளம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் குடிமைப் பணி போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
“கலைஞருக்கும் பிடிக்கக்கூடிய திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், “டார்கெட்டைத் தாண்டிய பயணம். 10 இலட்சம் இலக்கு வைத்தோம். 13 இலட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். இந்த ஓராண்டில் நான் முதல்வன் திட்டத்தால், என்ஜீனியரிங் மாணவர்கள் 70,878 பேர், கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் 1,03,305 பேர் மிகச் சிறந்த இடங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். மத்திய அரசின் குடிமைப் பணிக்குத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை, வங்கி, ரயில்வே, எஸ்.எஸ்.சி. போன்ற மத்திய அரசுத் தேர்வுகளுக்கானப் பயிற்சி என நான் முதல்வனின் எல்லை விரிந்து கொண்டே போகிறது. தமிழ்நாட்டு மாணவர்களை உலகில் முதன்மையானவர்களாக ஆக்குவதே எனது தணியாத ஆசை. அதை நோக்கி, நான் முதல்வனின் பயணம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.