
இந்திய ஒன்றியத்தின் தலைநகரான டெல்லியில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் உதவி ஆய்வாளராக சில மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார் 25 வயதுள்ள ஒரு இளம்பெண். இரவு பணியில் இருந்தவர், கடந்த வாரம் மாநகரை வலம் வந்தபோது சிலர் இணைந்து அவரை கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததோடு, அவரை கொடூரமாகக் கொலை செய்து வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
இந்திய ஒன்றியத்தின் தலைநகரில் இப்படியொரு கொடூரம் நடந்ததை ஒன்றியத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசும், அதன் கட்டுப்பாட்டின் கீழ்வுள்ள காவல்துறையும் மூடி மறைக்க முயற்சி செய்துள்ளது. இந்த விவகாரம் வெளியே வந்தபோது தற்போது நாடே அதிர்ச்சியாகியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும், குற்றத்துக்கு துணைபோவதுபோல் செயல்படாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பெண் காவலரை கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை, அனைத்து இஸ்லாமியக் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கையில் பதாகைகளை ஏந்தி ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.