Skip to main content

'ஈஷா' அறக்கட்டளையை எதிர்த்துப் போராடும் மணியரசனுக்கு மிரட்டல்... காவல்துறையிடம் புகார்.!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

Intimidation to Maniyarasan who fought against Isha Foundation ... Complain to the police

 

'ஈஷா' அறக்கட்டளை தலைவர் ஜக்கி வாசுதேவ் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தனியாரிடம் ஒதுக்க வேண்டும் என்ற ரீதியில் பேசி வருகிறார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 'தெய்வத் தமிழ்ப் பேரவை' என்ற அமைப்பின் மூலம், ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க வேண்டும் என்று (ஆன்மிகத் தலைவர்களுடன் இணைந்து) தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில் மே 8ந் தேதி தஞ்சையில் பிரம்மாண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் அழைப்புக் கொடுத்திருந்தார். 

 

போராட்டம், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார். இது சம்மந்தமான வீடியோ நக்கீரன் இணையத்திலும், நக்கீரன் இதழிலும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த பலர் பெ.மணியரசனை ஃபோனில் மிரட்டுவதுடன் அவரை அவதூறு பரப்பும் விதமாக முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டு முகவரியையும் வெளியிட்டு அவரை கிருஸ்தவர் என்றும் பதிவிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து மிரட்டல் பதிவுகள் வரும் நிலையில், பெ.மணியரசன் வெள்ளிக்கிழமை இரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

அந்தப் புகாரில், “ஈஷா அறக்கட்டளை தலைவர் ஜக்கிவாசுதேவ் சமீப காலமாக தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 40 ஆயிரம் கோயில்களை தனிநபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் தவறு இருந்தால், அதனைச் சரி செய்து கோயில்களை நிர்வகிக்க வேண்டும் என்று ஆன்மிகச் சான்றோர்களுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினேன். இதனால், ஆத்திரமடைந்த ஜக்கிவாசுதேவ் ஆட்கள் என்னைத் தாக்கும் நோக்கத்துடன் கடந்த இரண்டு நாட்களாக முகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் எழுதி என்னை மிரட்டி வருகிறார்கள்.

 

நான் மரபு வழி இந்துவாக இருந்தாலும் அவர்கள் கெட்ட நோக்கத்துடன் என்னை கிருஸ்தவர் என்றும் என் பெயர் 'டேவிட்' என்று எழுதி பரப்பி வருகிறார்கள். ஆகவே, இந்தச் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் அந்தப் புகாரில் கூறியுள்ளார். மேலும் போராட்டத்திற்குள் தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர், ஈஷா அறக்கட்டளை ஆதரவாளர்களால் தாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் போராட்டத்திற்கான ஆதரவும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈஷா அறக்கட்டளை பற்றிய பல புதிய தகவல்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்