கடைமடை விவசாயிகளுக்கு இதுவரை பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்காத ஒன்றிய அரசையும், இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தையும் கண்டித்து விவசாயிகள் வயலில் அல்வா கொடுத்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கடந்த 2021 - 2022 ஆண்டிற்கு இப்கோ டோக்கியோ என்கிற தனியார் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தனர். கடந்த ஆண்டு பெய்த கனமழையால் விவசாயம் முற்றிலுமாக அழிந்தது. இதனை தமிழக முதல்வரும், மத்தியக் குழுவினரும் பார்வையிட்டு பாதிப்பை மதிப்பீடு செய்துவிட்டு சென்றனர். ஆனாலும், காப்பீட்டு நிறுவனம் மிகப்பெரிய குளறுபடி கலந்த ஊழலை செய்து, காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.
இந்த நிலையில், காப்பீட்டுத் தொகை வழங்காத இப்கோ டோக்கியோ நிறுவனத்தையும், நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து நாகை மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பாலையூர் கிராமத்தில் நாற்று பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நேற்று அல்வா கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவசாயிகளை காப்பீட்டு நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருவதைச் சுட்டிக்காட்டும் வகையில் விவசாயிகள் வயலில் அல்வா கொடுத்தும், கோஷங்கள் எழுப்பியும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 236 வருவாய் கிராமங்களில் இதுவரை 28 கிராமங்களுக்கு மட்டுமே பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கி உள்ளதைக் கண்டித்துக் கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தின் வாயிலாக வலியுறுத்தினர்.
நாகையில் வயல்வெளியில் விவசாயிகள் ஒன்றிய அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக அல்வா கொடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த நாகை மாவட்ட விவசாயிகளையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.