சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், சுகவனமுருகன் ஆசிரியர் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுர்கம் வட்டத்தை சேர்ந்த வரஞ்சரம் என்ற ஊரில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அந்த ஊரில் உள்ள பசுபதீஸ்வரர் என்ற பழமையான சிவன் கோயிலில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் சிற்பத்தையும், கதிர் பிள்ளையார் சிற்பத்தையும் கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இது பற்றி ஆய்வாளர்கள் கூறும் போது..
லகுலீசபாசுபதம்:-
சைவத்தின் ஒரு பிரிவான பாசுபதம் என்ற பிரிவானது சங்ககாலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. பாசுபதமானது குஜராத் மாநிலம் காயாரோஹனம் என்னும் இடத்தில் லகுலீசர் என்பவரால் துவங்கப்பட்டு அவரின் சீடர்கள் கெளசிகர், கார்கி, கெளதமன் என்பவர்கள் மூலம் இந்தியா முழுக்க பரவியது.தமிழகத்தில் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் இந்த மதம் வேர் விடத்துவங்கியது. லகுலீசரின் சமயத்தத்துவங்கள் பாசுபதசைவம் என்ற பெயர் பெற்றன.இந்த பிரிவை பின்பற்றுவவர்கள் விபூதியில் குளிக்க வேண்டும்,சாம்பலில் படுத்து உறங்க வேண்டும், சாம்பலில் நடனமாட வேண்டும், பரமன் அணிந்த மாலைகளை அணிந்து கொள்ள வேண்டும்,தங்கள் சாத்திரங்களை பின்பற்றி கட்டப்பட்ட கோயில்களில்தான் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. கம்போடியா வரை லகுலீசபாகுபதம் பரவி இருந்தது. கி.பி 6 ஆம் நூற்றாண்டு துவங்கி 10 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்,பாண்டியர் குடவரைகள், முற்காலசோழர்களின் தனிச்சிற்பங்களாக லகுலீசர் சிற்பங்கள் கிடைக்கின்றன. சிவனின் 28வது அவதாரமாக லகுலீசர் அறியப்படுகிறார். தமிழகத்தில் இதுவரை 20 க்கும் மேற்பட்ட லகுலீசர் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதில் 10க்கும் மேற்பட்ட சிற்பங்கள் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கிடைத்துள்ளன.அதில் புதிய வரவாக வரஞ்சரம் என்ற ஊரில் புதிய லகுலீசர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
வரஞ்சரம் லகுலீசர்:
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றின் தெற்கே வரஞ்சரம் என்ற ஊர் அமைந்துள்ளது. ஆறகழூர் கல்வெட்டுகள் இந்த கோமுகி ஆற்றை ஆழ்வினை ஆறு என குறிப்பிடுகிறது. வரஞ்சரம் என இப்போது அழைக்கப்படும் இந்த ஊர் 11 ஆம் நூற்றாண்டில் திருவலஞ்சரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவனை திருவலஞ்சரமுடையநாயனார் என குறிப்பிடுகிறது. இந்த கோயில் இப்போது பாலாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. அருணாசலகவிராயர் இயற்றிய திருவரஞ்சர ஸ்தல புராணம் என்ற நூல் இக்கோயில் இறைவனைப்பற்றியும், இவ்வூரின் பெருமையையும் பற்றியும் பாடல்களாக விவரிக்கிறது.1200 ஆண்டுகளுக்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் செங்கல் தளியாக கட்டப்பட்ட இந்த கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கற்கோயிலாக மாற்றி கட்டப்பட்டுள்ளது. அப்போது செங்கலால் கட்டப்பட்ட கோயிலில் இருந்த லகுலீசர் சிற்பமும், கதிர் விநாயகர் சிற்பமும், தனி மாடத்தில் வைக்கப்பட்டு இன்று வரை வழிபாட்டில் உள்ளன. இங்குள்ள சப்த மாதர் சிற்பங்களும் மிகவம் பழமை வாய்ந்தவை ஆகும். விழுப்புரம் மாவட்டத்தில் லகுலீசர் சிற்பமானது ஜடாமுனி என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. தனிமாடத்தில் அமர்த்தப்பட்டுள்ள லகுலீசர் 2 அடி உயரமும் முக்கால் அடி அகலமும் உள்ள ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளார். பல்லவர்கள் காலத்தை சேர்ந்த சிற்பம் இதுவாகும். தலையில் உள்ள ஜடாபாரமானது நீள் இழையாக இறுதியில் முடிச்சிடப்பட்டு சுருட்டை முடியாக காட்சியளிக்கிறது.காதுகளிலும்,கழுத்திலும் அணிகலன்கள் காணப்படுகிறது.தலையானது சற்று வலது பக்கம் சாய்ந்து முகம் புன்னகையுடன் காணப்படுகிறது. அர்த்தலீலாசனத்தில் அமர்ந்து வலதுகாலை சற்று உயர்த்தி தண்டத்தை வலதுகாலின் மீது ஊன்றியபடி உள்ளார். இடதுகால் வலதுகால் மடிப்பின் உள் நுழைந்தபடி உள்ளது. வலது கை தண்டத்தை உறுதியாக பற்றியுள்ளது.வலது கரத்தின் அருகே நீண்டு நிற்கும் பாம்பானது காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட லகுலீசர் சிற்பங்களிலேயே மிக அழகிய சிற்பம் இதுவாகும்.
கதிர் பிள்ளையார்
விழுப்புரம் மாவட்டத்தில் இது வரை லகுலீசர் சிற்பங்கள் கண்டறியப்பட்ட பெரும்பாலான இடங்களில் 8ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கையில் நெற்கதிர் வைத்திருக்கும் கதிர் பிள்ளையார் சிற்பம் காணப்படுகிறது. வரஞ்சரத்திலும் தனி மாடத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த கதிர் பிள்ளையார் காணப்படுகிறார். பிள்ளையார் பெரும்தெய்வமாக உருவாகாத காலகட்டத்தில் வளமையின் சின்னமாக பிள்ளையார் கருதப்பட்டு கையில் நெற்கதிருடன் வழிபாட்டில் இருந்துள்ளார்.
கல்வெட்டு:
கி.பி. 1157 ஆம் ஆண்டு இரண்டாம் ராஜராஜனின் 11 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் காணப்படுகிறது. மிலாடாகிய ஜனநாத வளநாட்டு மேல் ஆற்றூர் கூற்றத்தில் உள்ள திருவலஞ்சரம் என இவ்வூரை குறிப்பிடுகிறது. 79 நாடுகளை சேர்ந்த சபையோர் திருவலஞ்சரத்தில் ஒன்று கூடி 11 நாட்டுப்பிரிவுகளை சேர்ந்த மலையமான்,நத்தமான் பிரிவுகளை சேர்ந்தவர்கள் இடங்கை என்ற பிரிவில் இணைந்து அப்பிரிவுக்கு கண்ணும் கையுமாக துணை நிற்போம் என உறுதி அளித்துள்ளனர். 12 ஆம் நூற்றாண்டில் ஒருவகை சமூக ஒருங்கிணைப்பு நிகழ்ந்ததற்கு சான்றாக இக்கல்வெட்டு திகழ்கிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.