துணை முதல்வரான ஒபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் மதனகலா பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பெரியகுளம் பெரியகோவில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பெண்களிடம் 70 பவுன் நகை திருட்டு போனது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் இரண்டே நாளில் தனிப்படை மூலம் கண்டுபிடித்தார். ஆனால் இந்த திருட்டுக்கு தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த், தேனி க்ரைம் எஸ்.ஐ., பாலமுருகனும் உடந்தையாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதோடு அந்த கும்பாபிஷேகத்தில் திருட சொல்லி பெண் திருடர்களை வரச் சொன்னதே இந்த இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐயும் தான் என்பதையும் கண்டுபிடித்தார், பெண் இன்ஸ்பெக்டர் மதனகலா.
அதன் அடிப்படையில் தான் சரக டிஐஜி ஜோஷி நிர்மல்குமாரும், அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த இரண்டு காக்கிகளையும் டிரான்ஸவர் போட உத்திரவிட்டார். இப்படி திருட்டுக்கு துணை போனது போலீஸ் அதிகாரிகள் என்று தெரிந்தும் கூட கடமை தவறாமல் செயல்பட்ட அந்த இன்ஸ்பெக்டர் மதனகலாவை மக்கள் பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் தான் கல்லுப்பட்டியை சுற்றியள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த சிலர் அப்பகுதிகளில் அடாவடி செய்து கொண்டு பொது மக்கள் சிலரிடம் வழிப்பறி செய்து வருவதுடன் மட்டுமல்லாமல் அப்பகுதிகளில் தோட்டம், காடுகளுக்கு வேலைக்கு போகும் மற்ற சமூகத்தினரை மிரட்டியும் தோட்டம், தொரவுகளுக்கு போய் இளநீர் மற்றும் காய்கறிகளையும் திருடி கொண்டு அந்த விவசாய மக்களையும் மிரட்டி வந்தனர். இதனால் மனம் நொந்து போன பொதுமக்களும், விவசாயிகளும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என இன்ஸ்பெக்டர் மதனகலாவிடம் புகார் கொடுத்தனர்.
அப்படி பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் மதனகலாவும் கல்லுப்பட்டியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலமுருகனை கைது செய்தார். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியினரோ இன்ஸ்பெக்டர் மதனகலாவை கண்டித்து பெரியகுளம் பகுதிகளில் கண்டன போஸ்டர்களை ஒட்டினார்கள். இதை கண்டு டென்ஷனான பெரிய குளம் வட்டார மக்கள் சார்பில் மதனகலாவை வாழ்த்தி அங்கங்கே போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர்.
அதிலும் முஸ்லிம் மக்கள் உள்பட சில சமூகமக்களும் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு ஆதரவாக ஒட்டியும் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இந்த நிலையில் கல்லுப்பட்டியை சேர்ந்த மற்ற சமூகத்தினர் திடீரென மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடமும் புகார் கொடுத்து இருக்கிறார்கள். இந்த புகாரை பற்றி அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் கேட்டபோது..
இன்ஸ்பெக்டர் மதனகலா மேடம் பாலமுருகனை கைது செய்ததிலிருந்தே தொடர்ந்து எங்களை அப்பகுதியில் உள்ள சிலர் மிரட்டி டார்ச்சர் செய்து வருகிறார்கள். அதனால் தான் அவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதோடு எங்களால் நிம்மதியாக தோட்டத்திற்கும், வெளியிலும் போக முடியவில்லை. எங்கள் பகுதியில் உள்ள மக்களை மிரட்டி வந்தவர் மீது முறையாக தான் இன்ஸ்பெக்டர் மேடம் நடவடிக்கை எடுத்து இருக்கிறார். அதுபோல் தற்பொழுது எங்களை மிரட்டி வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆக ஒரு பெண் இன்ஸ்பெக்டராக மதனகலா இருந்தும் கூட குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து பொதுமக்களின் பாராட்டையும் பெற்று வருகிறார்.