தற்பொழுது தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கரோனா மூன்றாம் அலை வந்தால் மிகப்பெரிய பாதிப்பு இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ''மக்களுக்கு பெரிய அளவில் ஒரு அச்சம் இருந்தாக வேண்டும். ஏனென்றால் இந்த தொற்றில் இருந்து நாம் விடுபட்டு விட்டோம் என்ற எண்ணம், மனநிலை யாருக்கும் வந்துவிடக் கூடாது. காரணம், இந்த தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. மூன்றாவது அலை என்ற ஒன்று இருந்தால் அது நிச்சயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்ற எண்ணம் உலகத்தில் இருக்கிற எல்லா நாடுகளுக்குமே இருக்கிறது. எனவே தமிழகத்தை சேர்ந்த பொதுமக்கள் அன்புகூர்ந்து இதற்கு ஒத்துழைத்து, முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது கைகளை கழுவுவது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். அதேபோல் தேவையில்லாமல் பொது இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.