Skip to main content

ஆதரவேற்றோர்க்கு உதவ பழைய துணி வாங்குவதாக வீட்டில் 11 லட்சம் அபேஸ்...!! சென்னையில் நடுத்தர வீடுகளை குறிவைத்த போலி அறக்கட்டளை!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுசீலா என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி தேனாம்பேட்டைக்கு ஆட்டோவில் வந்த சிலர் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அம்மா அறக்கட்டளை என்ற பெயரில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு இலவசமாக சேவை செய்து வருவதாக கூறி தங்களால் ஆன உதவியை செய்யுமாறு துண்டு பிரசுரங்களை கொடுத்து வீடுவீடாகச் சென்று பழைய துணிகள் மற்றும் சிறு தொகையை பெற்றுச் சென்றுள்ளனர்.

 

Fake Foundation 11 lakhs theft in chennai


இந்த நிலையில் சுசீலா வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது மகன் வீட்டில் இருந்த பழைய துணி மூட்டையை துணி சேகரிக்க வந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்த சுசீலா பழைய துணி மூட்டை குறித்து கேட்டதற்கு அவரது மகன் நடந்ததை கூறியதும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். வீடு வாங்குவதற்காக சிறுக சிறுக சேமித்த 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருட்டு பயம் காரணமாக பழைய துணி மூட்டையில் கட்டி வைத்துள்ளார் சுசீலா. இதனை அறியாத சுசீலாவின் மகன் அந்தப் பெண்ணிடம் மூட்டையை கொடுத்துள்ளார். துண்டு பிரசுரத்தில் இருந்த முகவரிக்கு தனது கணவருடன் விசாரிக்கச் சென்றபோது அந்த இடம் பாழடைந்த ஓட்டு கோட்டையாக இருந்தது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

 

Fake Foundation 11 lakhs theft in chennai


தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சுசீலா அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றது. பதிவு எண்ணை வைத்து  ஆட்டோ உரிமையாளரை விசாரித்தபோது, மகாலட்சுமி என்பவர் தனது ஆட்டோவை வாடகைக்கு எடுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து செங்குன்றம் பகுதியில் இருந்த மகாலட்சுமியை பிடித்து விசாரணை நடத்தியதில் பணத்தை திருடியதை ஒத்துக் கொண்டார். அவரது வீட்டிலிருந்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Fake Foundation 11 lakhs theft in chennai


மகாலட்சுமியிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பணம், காசோலை மற்றும் பழைய துணிகளை பெற்று பணம் சம்பாதிக்க சென்னையில் பெரிய கும்பலே செயல்படுவது தெரிய வந்துள்ளது,. பணத்தை வாரத்திற்கு ஒரு முறை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளவும் பழைய துணிகளை மொத்த ஏஜெண்டுகளிடம் விற்று பணம் சம்பாதிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பல் ஏழை பெண்களை வேலைக்கு அமர்த்தி தாங்கள் கொடுக்கும் துண்டுப்பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று கொடுத்து பணம் மற்றும் துணிகளை பெற்றுவரும் பெற்றுவர பயிற்சி அளிக்கின்றனர். சென்னையில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் உள்ள பகுதிகளில் குறிவைத்து இந்த மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது.

 

Fake Foundation 11 lakhs theft in chennai


அம்மா அறக்கட்டளை அரவிந்தன் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் மக்கள் நம்பிக்கை என்ற வார இதழை நடத்தி வருவதையும் போலீசார் கண்டறிந்தனர். காவல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பதுபோல் புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கும் அந்த நபர் போலி அறக்கட்டளை பெயரில் பண வசூலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. 24 மணி நேரத்தில் மகாலட்சுமியை கைது செய்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.  

 

Fake Foundation 11 lakhs theft in chennai


மேலும் முக்கிய குற்றவாளியான அரவிந்தனை தேடி வருகின்றனர். ஆதரவற்றோர் பெயரை பயன்படுத்தி பணம் துணிகளை வாங்கிச் செல்லும் மோசடி கும்பலிடம் ஏமாந்துவிடக்கூடாது. தாங்கள் கொடுக்கும் பணம் ஏழைகளை சென்றடைய அவற்றை வசூலிக்க வரும் நபர்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து செயல்பட வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்