தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நெல்லை, கடலூர், புதுக்கோட்டை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகம், புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில் தமிழகத்தில் இன்று (01.12.2019) அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (02.12.2019) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கையை அடுத்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 52 இடங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழுக்கள் உள்ளன. மழைக்கால தொற்றுகளில் இருந்து மக்களை பாதுகாக்க 44 நிலையான மருத்துவக்குழுக்கள் தயாராக உள்ளன. அவசர பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 108 ஜே.சி.பிக்கள், 126 லாரிகள் உள்ளதாக கூறியுள்ளது. மேலும் சென்னையில் அனைத்து இடங்களிலும் தேங்கிய மழைநீர், விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன.