சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்வை எதிர்த்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சுங்கக் கட்டணம் கடந்த 1 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அவ்வாறு சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை போளூரில் உள்ள சுங்கச்சாவடி முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அதேபோன்று திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.