கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் 29 வயது உள்ள அசோக். இவர் நேற்று முன்தினம் அதே அம்மன் கோயில் மரத்தடியில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மரத்திலிருந்து ஒரு பாம்பு தொப்பென்று அசோக் மீது விழுந்தது. அவர் மீது பாம்பு விழுந்ததைக் கண்டு அசோக் சுதாரிப்பதற்குள் அவரது கையில் கடித்து விட்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.
கடித்த நிலையிலும் அசோக் பதட்டம் அடையாமல் ஓட்டமாக ஓடிச் சென்று கடித்து விட்டு ஓடிய அந்த பாம்பை லபக்கென்று கையில் பிடித்துக் கொண்டார். அந்த பாம்போடு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்றார். அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த புற நோயாளிகள்கையில் பாம்புடன் அசோக் வருவதைக் கண்டு மிரண்டு போய் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். அங்கிருந்த டாக்டர்களிடம் அசோக் கையில் கொண்டு வந்திருந்த பாம்பை காட்டி என்னை கடித்த பாம்பு இதுதான் என்று கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த டாக்டர்கள் பாம்பை அப்புறப்படுத்திவிட்டு அசோக்கிற்கு விஷ முரிவுதடுப்பு ஊசி போட்டு சிகிச்சையில் வைத்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக சிகிச்சையில் உள்ளார் அசோக். அவரை கடித்த அந்தப் பாம்பு கொம்பேறி மூக்கன் என்று கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் துணிச்சலோடு தன்னைக் கடித்து விட்டு ஓடிய பாம்பை துரத்திச் சென்று பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அசோக்கின் தைரியத்தைக் கண்டு பலரும் பாராட்டுகின்றனர்.