Skip to main content

பேஸ்புக் மூலம் சிறுமிகளை காதல் வலையில் சிக்கவைத்து நகைகள் பறிப்பு - சென்னை இளைஞர் கைது!

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
face


சென்னையில் பேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகி, அவர்களை காதல் வலையில் சிக்கவைத்து, 20 சவரன் நகைகளை பறித்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கையில் ரோஜாவுடன் இருக்கும் சினிமா கதாநாயகன் போல் இருப்பவர் தான் ராகுல் குமார். சென்னை சூளைமேட்டை சேர்ந்த கல்லூரி மாணவரான இவர், தனது பெயரை ஸ்டைலாக இருப்பதற்காக வில்லியம்ஸ் ராகுல் என பெயரை மாற்றி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பேஸ்புக்கில் இவரது பக்கத்தை திறந்தால், பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் வகையில் நவநாகரீக உடையுடன் ஸ்டைலாக இளம்பெண்களை கவர்ந்து இழுக்கும் அளவிற்கு விதவிதமான புகைப்படங்களை வைத்துள்ளார். பேஸ்புக்கில் உள்ள பள்ளி சிறுமிகளை குறிவைத்து, அவர்களின் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து, அவர்களை தன்வசப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இவரின் பேஸ்புக் பதிவு மூலம் சென்னை எம்.எம்.டி.ஏ.காலனியிலுள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இச்சிறுமியை தனது காதல் வலையில் விழவைத்த அவர், சிறுமியின் நம்பிக்கையை பெறும் வகையில் பீச், தியேட்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் தான் சுயதொழில் தொடங்க, லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதாகவும் இதற்கு உதவும் படியும் சிறுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு சிறுமி தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியதையடுத்து, வீட்டிலிருக்கும் நகைகளை எடுத்துவரும் படி மூளைச்சலவை செய்துள்ளார். ராகுலின் பேச்சில் மயங்கிய சிறுமி சிறு, சிறு நகைகளாக 20 சவரன் நகைகளை தந்துள்ளார்.
 

face


இந்நிலையில் நகைகளை காணவில்லை என பெற்றோர் தேடியபோது தான் சிறுமி தனது நண்பருக்கு அளித்ததை கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் ராகுலிடம் கேட்டபோது, முறையான பதில் இல்லாததை அடுத்து சென்னை அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது அனைவரிடம் ஆண்டராய்டு ஸ்மாரட் போன் உள்ளதால், சமூக வலைதளத்தை வீட்டிலுள்ள குழந்தைகள் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் மனநல மருத்துவர் ஜனனி ரெக்ஸ்.  

 

 

குறிப்பாக சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பள்ளி சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை பெற்றோர்கள் உன்னிப்பாக கண்காணித்திட வேண்டும். அவர்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள் என்பதை கவனித்து அவர்களுக்கான அறிவுரையை பெற்றோர்கள் வழங்கிட வேண்டும் என மனநலமருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

முன்பெல்லாம் சமூக வலைதளத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் கணினி தேவைப்பட்டது. ஆனால் தற்போது ஸ்மார்ட் போன் வந்து விட்டதால் அது மிகவும் எளிதாகவிட்டது. ஒருவர் சமுக வலைதளத்தில் தம்மை பற்றி கூறப்படும் தகவல் அனைத்தும், உண்மை தானா என்பதை ஆராயாமல் அவர்கள் கூறும் அனைத்தும் உண்மையே என்று கண்மூடித்தனமாக நம்புவதால் தான் இதுபோன்ற தவறுகள் நடப்பதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் பிறகாவது பெற்றோர், தங்களது பிள்ளைகளை கண்காணித்திட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சார்ந்த செய்திகள்