அதிமுக பிரமுகரை கொலை செய்த நபர், கொலை செய்த கையோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடியில் வசித்து வருபவர் கணேசன். அதிமுகவின் கிளை செயலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணி அளவில் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த பகுதியில் இருந்த பெட்டிக்கடையை திறக்க சென்றபோது மர்ம நபரால் அவர் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
உடனடியாக அங்கிருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். அதேநேரம் கொலை செய்யப்பட்ட கணேசனின் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் அரசு பேருந்தை வழிமறித்து கொலைக்கான நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவத்திற்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடியும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
விசாரணையில் கணேசனை கொலை செய்தது அதேபகுதியைச் சேர்ந்த குண்டுமணி என்பது தெரியவந்தது. குண்டுமணியை போலீஸார் தேடிவந்த நிலையில் குண்டுமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் குண்டுமணியை கைது செய்தனர். குண்டுமணி தங்கள் ஏரியாவில் குடிநீர் பிரச்சனை இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் மனு கொடுக்க வந்திருந்தது தெரிய வந்தது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் அந்த ஊரில் முக்கிய பிரமுகராக இருந்த கணேசன் விநாயகர் கோவில் ஒன்றை கட்டி வந்தார். அந்த கோவிலில் இருந்த விநாயகர் சிலையை தூக்கிச் சென்று கிணற்றில் குண்டுமணி வீசி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தன்னைப் பிரிந்து வாழ்ந்து வரும் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் கருப்பாயியை தகராறு காரணமாக அரிவாளால் வெட்டிய குண்டுமணி, இருசக்கர வாகனத்திலேயே மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அதிமுக கிளை செயலாளர் கணேசன் தன்னுடைய கடையைத் திறந்து கொண்டிருந்தார். அவரும் தன்னை எதிர்த்ததால் ஆத்திரத்தில் இருந்த குண்டுமணி அவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.