தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார மொழியில் பேசி வெளியிடப்பட்ட ஒரு ஆடியோ ஒரு இன பெண்களை இழிவாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த ஆடியோ சம்மந்தமாக தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் பொன்னமராவதியில் அந்த சமூகத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெரிய போராட்டங்களை நடத்தினார்கள். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பதற்றம் நிலவியது. இதனால் தடியடி கல்வீச்சு சம்பவங்களும் நடந்த பிறகு 144 தடை உத்தரவு போடப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரச்சனைக்குரிய ஆடியோவை எங்கிருந்து வெளியிட்டார்கள் யார் வெளியிட்டது என்பது குறித்து திருச்சி ஐஜி வரதராஜூ தலைமையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட போலிசாரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட ஆடியோ வெளிநாட்டில் இருந்து அனுப்பிதாக கண்டறியப்பட்டது. அதன் பிறகு அதற்கான விசாரணை ரகசியமாக நடந்துகொண்டிருந்த நிலையில் முழு தகவல் பெற வாட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியையும் நாடினார்கள்.
மற்றொரு பக்கம் சம்மந்தப்பட்ட ஆடியோவை பரவியவர்களை கண்டறிந்தும் இது சம்மந்தமாக அவதூறு பரப்பியர்வர் என்று பட்டுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பலரையும் விசாரணை செய்தனர். அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரச்சனை முடிவுக்கு வராததால் ஒரு பக்கம் போராட்டங்களும் நடந்து கொண்டே இருக்கிறது. மற்றொருபக்கம் இரு சமூகத்தினர் மாறி மாறி குற்றச்சாட்டுகளையும் அவதூறாகவும் ஆடியோக்களை வெளியிட்டு வருவதால் இரு சமூக பிரச்சனை வந்துவிடுமோ என்று அதை தடுக்கும் முயற்சியிலும் போலிசார் ஈடுபட்டு வழக்குகளும் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஆடியோ வெளியிடப்பட்ட பிரச்சனையில் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த இளைஞரை பொன்னமராவதி விசாரணைக் குழுவினர் அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட அந்த இருவர் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பதும், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த வசந்த் எனவும் தெரியவந்துள்ளது. இருவரும் தற்போது கைது செய்திருப்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் பிறகு போராட்டங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளது.