வேலூர் மாவட்டம் ஆம்பூர் – வாணியம்பாடி நகரங்கள் பிரியாணிக்கு பெயர் போனது. வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பிரியாணிக்கு என்றே தனி உணவுப்பிரியர்கள் உருவாகியுள்ளார்கள். அவர்களை குறிவைத்து ஆம்பூர் தம் பிரியாணி, வாணியம்பாடி தம் பிரியாணி என்கிற பெயரில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிரியாணி கடைகள் உருவாகியுள்ளன.
இந்த இரண்டு நகரங்களில் மட்டும் தினமும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு குறையாமல் பிரியாணி சாப்பிடுகிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதனால் சின்னதும், பெரியதுமாக நூற்றுக்கும் அதிகமான பிரியாணி ஹோட்டல்கள் வாணியம்பாடி, ஆம்பூர் நகரத்தில் உள்ளது. தற்போது இதில் பெரும்பாலான கடைகள், தரமற்ற சிக்கன்களை கொண்டு பிரியாணி செய்து விற்பனை செய்கின்றன என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஜீலை 31ந்தேதி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியான மருத்துவர் வெங்கடேஷ் தலைமையில் மருத்துவர் ஆரோக்கியபிரபு மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு சிக்கன் கடைகளில் ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் ஆம்பூர் உமர்சாலையில் உள்ள நவ்ஷாத் என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சிக்கடையில் மட்டும் 100 கிலோவுக்கு அதிகமான காலாவதியான சிக்கன் இருப்பதை பார்த்து அதை பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்பு அலுவலகத்தை சேர்ந்தவர்களோ, வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் நாள் கடந்த சிக்கன்கள் மற்றும் இரண்டு நாள், மூன்று நாளான சிக்கன் குருமாக்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தபடியிருந்தன. அதற்காக தான் இந்த ஆய்வு என்கிறார்கள். கடைக்காரர்களோ, சில கடைகள் தான் அப்படி செய்கின்றன. பெரும்பாலான கடைகள் அப்படி செய்வதில்லை. அப்படி செய்தால் வியாபாரம் படுத்துவிடும் என்கிறார்கள்.
நாள்பட்ட சிக்கனை யாரும் பயன்படுத்தாமல் இல்லை என்பது தெரியவருகிறது. அதனால் அசைவ பிரியர்கள் பிரியாணி சாப்பிடும் முன் நல்ல ஹோட்டலா என விசாரித்து அதன்பின் வாணியம்பாடி – ஆம்பூர் பிரியாணியை ருசியுங்கள்.