போதிய நீர்வரத்து இல்லாததால் விதைத்த நெற்பயிர் கைவிட்ட நிலையில், காய்ந்திருக்கும் நெற்பதரையாவது தீவனமாக்கலாம் என நெற்பதரை அறுக்க சென்று விவசாயி பாம்பு கடித்து பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிங்காரவேலன். இவருக்கு மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இளையான்குடி பகுதியில் போதிய மழை பெய்யாதால் விவசாயம் இன்றி விவசாயிகள், பல இன்னலுக்கு ஆளகி வறுமையில் வாடி வந்த நிலையில், இருக்கின்ற கிணற்று நீரைக் கொண்டு தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார் சிங்காரவேலன். கிணற்று நீரும், மழை நீரும் கை கழுவ பயிரிட்ட நெல் பயிர் விளைச்சல் இல்லாமல் பதராகி போய்விட்டது.
இந்நிலையில், நிலத்தில் இருக்கின்ற நெற்பதரையாவது மாட்டுத் தீவனமாக்கலாம் என்ற எண்ணத்தில் கடந்த 14ம் தேதியன்று அதிகாலை 6.00 மணிக்கு பதரை அறுக்க சென்று தவறுதலாக அங்கிருந்த கண்ணாடிவிரியன் பாம்பை மிதிக்க, அது அவரை கடித்து மறைந்துள்ளது. காயம்பட்ட நிலையிலும் எந்த பாம்பு..? தன்னைக் கடித்தது எனத் தெரிந்து கொள்ள அந்த பாம்பை கையில் பிடித்துக் கொண்டு சென்று, அடையாளம் காண்பித்துவிட்டு இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி இன்று அதிகாலையில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. விவசாயி பாம்பு கடித்து உயிரிழந்தது அப்பகுதி மக்களிளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.